சென்னை: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணி என்பவரின் 10 வயது மகளுக்கு, மூன்று வயது முதலே சிறுநீரகப் பிரச்சினை (Nephrology) இருந்ததாக தெரிகிறது. இதனால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுமி சகிச்சை பெற்று வந்துள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு வலது காலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு, சிறுமி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்த உறைதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக சிறுமியின் பாதம் கருகியதாகவும் கூறியுள்ளனர்.
இதனிடையே கடந்த 13ஆம் தேதி, தலைமைக் காவலர் கோதண்டபாணி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம்சாட்டி, தலைமைச் செயலக வாசலில், பாதிக்கப்பட்ட மகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகளின் கால் கருகியதாகவும், மருத்துவர்கள் தவறாக கணித்து தவறான மருந்துகளை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
அதேபோல் மருத்துவர்கள் தனது மகளுக்கு அனுமதியின்றி இரத்த சுத்திகரிப்பு செய்ததாகவும், அதன் விளைவாக வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு காரணமான அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தலைமைக் காவலரின் கோதண்டபாணியின் இந்த போராட்டம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இது தொடர்பாக தலைமை காவலர் கோதண்டபாணி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "எனது மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதனால் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மீது வழக்குப்பதிவு செய்து அதனை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார், அதனை மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், துறை ரீதியிலான விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை தரும்படி ஓட்டேரி போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.