சென்னை: கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா. இவர் எழுதும் நூல்களில் தனது பெயரை சுருக்கி குவெம்பு என்று குறிப்பிடுவார். இதனால் அவரை குவெம்பு என்று சென்னால்தான் இலக்கிய உலகத்தில் அடையாளம் தெரியும். இவர் ஞானபீடம், பத்ம பூசன், சாகித்ய அகாடமி என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கன்னட இலக்கியத்தில் மட்டுமல்லாது இந்திய இலக்கியம் வரை பிரபலமானவர்.
குவெம்பு ராஷ்ட்ரிய புராஸ்கர் தேசிய விருது: குவெம்புவின் எழுத்துக்களைப் பிரபலப்படுத்துவதும், அவர் முன்வைத்த கொள்கைகளைப் பரப்பவும் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை தான் ‘ராஷ்டிரகவி குவெம்பு பிடதிஷ்டான்”. இங்கு தான் ‘குவெம்பு ராஷ்ட்ரிய புராஸ்கர் தேசிய விருது’ நிறுவப்பட்டது. இலக்கிய உலகத்தில் சமூகத்திற்கான படைப்புகளை எழுதி வரும் எழுத்தாளர்களுக்கு 2013ஆம் ஆண்டிலிருந்து குவெம்பு ராஷ்ட்ரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில், தேர்வு செய்யப்படும் எழுத்தாளருக்கு ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
எழுத்தாளர் இமையம் : அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டார். எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. இவர் 1964ஆம் ஆண்டு விருத்தாசலத்தில் பிறந்தார். இவரது முதல் படைப்பு, ‘கோவேறு கழுதைகள்’ எனும் நாவலாகும். தொடர்ந்து, ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் உள்ளிட்ட நாவல்களை எழுதினார். இவர் எழுத்தில் 2018ஆம் ஆண்டு க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘செல்லாத பணம்’ நாவலுக்காக கடந்தாண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
இவர், குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஸ்டாலின், தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய ஒரு எழுத்தாளராக திகழ வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து பல நூல்களை எழுத வேண்டும் என்று இமையத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் பேசிய எழுத்தாளர் இமையம் கூறுகையில், “1960-70களில் இருந்த பதிப்பகங்களை விட தற்போது பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய இளைஞர்கள் புத்தகங்கள் படிப்பதில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானது. முதலமைச்சர் ஸ்டாலின் எழுத்தாளர்களையும் தமிழ் மொழியையும் ஊக்குவிப்பதோடு, எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் என பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வளர்க்கிறது. எழுத்தாளர்களின் நூல்களை அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். நூலகங்களுக்கு தேவையான அனைத்து நிதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழி, தொல்லியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, நம்முடைய பாரம்பரியத்தை உலக அளவில் அறிமுகம் படுத்தும் வகையிலும், நம்முடைய மொழியை வளமைப்படுத்தி பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ் மொழி என்றால் என்னவென்று தெரியாது. தமிழ் இலக்கண இலக்கிய பெருமைகள் தெரியாது. தமிழ் மொழியின் உடைய பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியாது. தற்காலிக ஆட்சியாளர்கள் போல் தான் அவர்கள் செயல்பட்டார்கள். ஆனால் திமுகவினர், அறிஞர்களை போற்றுவார்கள், மொழியை மதிப்பார்கள், கலாச்சார பண்பாட்டு பொருட்களை பாதுகாத்து முழு கவனம் எடுத்து செயல்படுத்துவார்கள். தமிழ் சமூகத்தை ஆற்றல்மிக்க அறிவுமிக்க சமூகமாக மாற்றுவதே திமுகவின் அடிப்படை நோக்கம். குறிப்பாக சமூக நீதியை பேணுவதே இந்த ஆட்சியின் அடிப்படையாக திகழ்கிறது” என்றார்.
இதையும் படிங்க: Jerlin Anik:'அர்ஜுனா விருது' பெற்ற ஜெர்லின் அனிகாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!