உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து உலக மக்கள் தொகை தின பிரசுரங்களையும் வெளியிட்டு விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், குடும்ப நல திட்டத்தை செயல்படுத்துவதில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், தமிழ்நாட்டில்தான் தேசிய அளவிலான இலக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் கூறினார்
மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவில் எளிய கருக்கலைப்பு முறையை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பு கருக்கலைப்பு முறையும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தேவையற்ற கர்ப்பங்கள் தவிர்க்கப்படுவதாகவும் உயர் பிறப்பு விகிதம் அதிகமுள்ள 21 மாவட்டங்களில் 120 வட்டாரங்களை கண்டறிந்து சிறப்பு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 80.4 விழுக்காடு தாய்மார்கள் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகவும் அனைத்து விதமான குடும்ப நல சேவைகள் நிரந்தர, தற்காலிக முறையில் செய்யப்படுவதாகவும், அவர்களின் விருப்பப்படி சேவையை தேர்ந்தெடுத்து செய்வதாகவும் கூறினார்.
இதனையடுத்து, அரசு மருத்துவ நிலையங்களில் பிரசவத்திற்குப் பின் 48 மணி நேரத்திற்குள் கருத்தடை வளையம் பொருத்திக்கொள்ளும் தாய்மார்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.300 வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதுபோல், தமிழ்நாட்டில் திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, விருதுநகர், நாகை மயிலாடுதுறை, சேலம், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.