சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் உரையாற்றிய அவர், 'சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி 10,11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறினார். தொடர்ந்து பல்வேறு துறைகள் தொடர்பான நலத்திட்டங்களை அறிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு: "சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கும். இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும். இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலன்: உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,763 கோடி மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் (RIGHTS Project) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டம், 2023-24ஆம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சைப் போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மையங்கள் உருவாக்கப்படும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும் உயர்த்திட முதலமைச்சர் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார். இதற்கென, வரவு-செலவுத் திட்டத்தில் 1,444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக, பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேர்களின் விவரங்கள் கொண்ட தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரமான உணவினை வழங்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளின் செயல்பாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 36.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது விடுதிகளின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப பதினைந்து பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வரவு-செலவுத் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1,580 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள்: முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும், 193 பள்ளிகளில் 30 சதவீதம் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 2.20 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனர். 2021-22ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உயர் கல்வியில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவியர்கள் சேர்ந்துள்ளனர்.
இவ்வாண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார் 24,712 கோடி ரூபாய்க்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கென சிறப்பு "புத்தொழில் இயக்கம்" ஒன்றை அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர், புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு: தானிய சேமிப்புக் கொள்ளளவை அதிகரித்து, இழப்பினை குறைப்பதற்காக, 2021-22ஆம் ஆண்டு முதல் 238 கோடி ரூபாய் செலவில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புக் கொள்ளளவுடன் 213 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 28,000 மெட்ரிக் டன் சேமிப்புக் கொள்ளளவு கொண்ட 12 கிடங்குகள் 54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன. விவசாயக் கடன் தள்ளுபடிக்கு 2,393 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 600 கோடி ரூபாயும் என மொத்தம் 3,993 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் வளங்கள்: நீர் நிலைகளை மீட்டெடுத்து, புத்துயிர் அளிக்க பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் 462 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 341 ஏரிகள், 67 அணைக்கட்டுகள், 11 கால்வாய்களை புனரமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 259 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 309 ஏரிகளில் பழுதுபார்த்தல், புனரமைத்தல், மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீண்டகால வெள்ளத் தணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒன்பது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, இரண்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. நடப்பாண்டில் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 12 வெள்ளத் தணிப்புப் பணிகள் 434 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளன.
கால்நடைப் பராமரிப்பு: விலங்குகள் நல வாரியத்தை வலுப்படுத்தி செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, இம்மதிப்பீட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் இனவிருத்தி கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளைச் செயல்படுத்தவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
மீனவர் நலன்: வரும் நிதியாண்டில் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் என 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 389 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பவளப்பாறைகள் மீன்களுக்கு புகலிடம், உணவு அளித்து மீன் குஞ்சுகள் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து மீன்வளத்தைப் பாதுகாக்கின்றன. நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில் 3 மாவட்டங்களில் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப்பாறை அலகுகள் 79 கோடி ரூபாயிலும், பாக் வளைகுடா தவிர ஏனைய மாவட்டங்களில் 200 செயற்கை பவளப்பாறை அலகுகள் 64 கோடி ரூபாயிலும் ஒன்றிய மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.
ஊரக வளர்ச்சித்துறை: வரும் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இதுவரை, 10,914 கோடி ரூபாய் செலவில் 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற மேம்பாடு: அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கலை சீரமைத்தல், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புதுப்பித்தல், பசுமையான நகர்ப்புறங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ், 9,378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 5,960 கோடி ரூபாய் மாநில அரசாலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் செலவிடப்படும். இந்த திட்டத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 612 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக, உயிர் நீர் (ஜல் ஜீவன்) இயக்கத்தின் கீழ், 103 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு, 15,734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 54 சதவீத செலவினத்தை மாநில அரசு ஏற்கும். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,145 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தைச் செயல்படுத்த 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக,44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!