சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் இன்று (அக்-18) மோதுகிறது. இந்த ஆட்டமானது இந்திய நேரப்படி, மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரயிலில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது, இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவுத் தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி!” - விஜய் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!
அதன்படி ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினைப் பயன்படுத்தி எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வாயிலில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் போட்டிக்கான டிக்கெட்டில் உள்ள பார்கோடு இன்றியமையாததாக இருக்கிறது. அதனால், பயணிகள் போட்டி டிக்கெட்டை சேதம் அடையாமல் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவைகள்;
நீல வழித்தடம் - பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடம் - புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இந்த சேவை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.