ஊரடங்கு உத்தரவு பொதுமக்கள் பலரையும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதில், அதிகப்படியான பாதிப்பிற்கு உள்ளானவர்கள் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகள் தான். கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரவத் தொடங்கியிருந்தது. இதையடுத்து, சந்தை மூடப்பட்டது.
பின்னர் அங்கிருந்த மொத்த வியாபாரிகளுக்கு திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் செய்வதற்கு வழிவகை செய்தது சி.எம்.டி.ஏ நிர்வாகம், பின்னர் பழ வியாபாரிகளுக்கும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அமைத்துக் கொடுத்து வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் கடைகள் அமைத்திருந்த சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகள் செயல்பட தற்போது வரை எந்த நடவடிக்கைகளும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு தற்போது வரை தொடர்கிறது.
சிறு வியாபாரிகளை பொறுத்தவரை ஆயிரத்து 500 கடைகள், அதன் வியாபாரிகள் கடைக்கு இருவர் வீதம் 3 ஆயிரம் பேர், இவர்களை சார்ந்து பணியாற்றும் ஊழியர்கள் என மொத்தம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கடைகள் அமைத்து வியாரத்தில் ஈடுபட சென்னையில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்படும் என சி.எம்.டி.ஏ-வால் வாக்குறுதி வழங்கப்பட்டும் இதுவரை அப்படி எந்த முயற்சியம் எடுக்கப்படவில்லை.
சிறு வியாபாரிகளின் கடைகளில் வேலை செய்து வந்த பலரும் வெவ்வேறு பணிகளை தேடிக்கொண்டனர். ஆயிரத்து 500 கடைகளின் வியாபாரிகளில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக திருமழிசையில் செயல்படும் மொத்த வியாபாரிகளிடம் கமிஷனுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் சிறிய நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சென்னையின் நகர் பகுதிகளில், தெருக்களில் காய்கறிகளை விற்க தொடங்கியுள்ளனர்.
இவர்களில் 15 விழுக்காட்டினர் ஊர்களுக்கு சென்றுவிட்டு இன்னும் தங்களின் தொழில் தொடர்பாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றனர். இப்படி சிறு வியாபாரிகள் சிதைந்துபோனதற்கு அவர்களுக்கு போதிய இடங்களை ஒதுக்காமல் சி.எம்.டி.ஏ நிர்வாகம் நிராகரித்ததே காரணம் என்கிறார் சிறு வியாபாரிகள் சங்க நிர்வாகி முத்துப்பாண்டியன்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”வசதி படைத்த மொத்த வியாபாரிகளுக்கு ஒரு நியாயம், சிறு வியாபாரிகளுக்கு ஒரு நியாயம் என சி.எம்.டி.ஏ செயல்பட்டதன் விளைவே எங்களின் வியாபாரிகள் தற்போது வாழ்வாதாரத்திற்கு வழியின்றி நிர்கிறார்கள். ஒட்டுமொத்த கோரிக்கையான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு இடங்களை ஒதுக்கக்கோரி சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயனிடன் நாளை கோரிக்கை வைக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை தீர்மானிக்க உள்ளோம்” என்றார்.
சிறு வணிகர்களின் தற்போதைய நிலவரம் தொடர்பாக சங்க நிர்வாகி முத்துக்குமார் தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:
வியாபாரிகள் 3 ஆயிரம் பேர் மற்றும் கடைகளில் வேலை செய்பவர்கள் என ஒரு கடைக்கு தோராயமாக 5 பேர் மூன்று பேர் என ஆயிரத்து 500 கடைகளுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் வரை வேலை செய்து வந்தனர். மொத்தம் ஆயிரத்து 500 கடைகள், ஒவ்வொரு கடைக்கும் அங்கீகாரம் பெற்ற வியாபாரி ஒருவர் அங்கீகாரம் இல்லாத வியாபாரி ஒருவர் என கடைகளை நடத்துகின்றனர். இவர்களின் கடை உரிமம் பெற்ற வியாபாரிகள் பெரும்பாலானோர் திருநெல்வேலி, திண்டுக்கல், விழுப்புரம், திருச்சி, கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களாக ஆயிரத்து 200 பேர் இருக்கின்றனர்,
இவர்கள் கடைகள் நடத்த சி.எம்.டி.ஏ நிர்வாகம் இடங்களை ஒதுக்காததால் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களில் உள்ளனர். இவர்களில் வியாபாரிகள் மற்றும் வேலை செய்பவர்கள் என ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் திருமழிசையில் செயல்படும் மொத்த வியாபாரிகளிடம் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள இரண்டாயிரம் பேர் சாலை ஓரங்களிலும், வாகனங்களிலும் காய்கறிகளை விற்று தங்களின் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவர்கள் தவிர மீதமுள்ள மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு வேலைகளுக்கு செல்ல முற்படுகின்றனர்.
சிறு வியாபாரிகள் குற்றச்சாட்டு தொடர்பாக சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயனை தொடர்புகொண்ட போது:
சி.எம்.டி.ஏ தரப்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி சிறு வியாபாரிகளுக்கு சென்னை நகர் பகுதிகளுக்குள் 600 இடங்கள் ஒதுக்கப்பட்டு அந்த இடங்களில் சிறு வியாபாரிகள் காய்கறிக் கடைகளை நடத்துகின்றனர். அதே சமயம் சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் திருமழிசையில் கடைகள் ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் - கலைஞரை வசைபாடும் கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்!'