'வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்க': மாம்பலம் வட்டாட்சியருக்கு உத்தரவு - வழக்கு ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை சாலிகிராமத்தில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் வட்டாட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
!['வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்க': மாம்பலம் வட்டாட்சியருக்கு உத்தரவு Chennai High court](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1200-675-18253092-thumbnail-16x9-aspera.jpeg?imwidth=3840)
சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமாக சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் 2016ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதுதொடர்பான மனுவில், "சாலிகிராமம் வீரமாமுனிவர் தெருவில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 92 சென்ட் நிலத்தை அளவீடு செய்ய மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாம்பலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.
கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த சாலையை அளவீடு செய்து எல்லை வரையறை செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மாம்பலம் வட்டாட்சியர், கோயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு 2016ம் ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், கடிதத்தில் வேறு ஒரு நிலம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும், கோயில் நிலத்துக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை உரிய முறையில் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, "தகுதியான சர்வேயரை கொண்டு கோயில் நிலத்தை அளவீடு செய்து, மாம்பலம் வட்டாட்சியர் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 26ம் தேதிக்கு நீதிபதி சுப்பிரமணியன் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: இரவில் பிரியாணி சாப்பிட காரில் சென்றபோது நேர்ந்த சோகம்: 3 இளைஞர்கள் பலி!