சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அடுத்த திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ்.எம். ஜூவல்லரி என்ற தங்க நகை கடையை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து வாங்க கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடை உரிமையாளர் தருண் குமார், ஒருவரிடம் நகைகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் 150 கிராம் தங்க நகைகளை திருடியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் நகையை சுருட்டிக்கொண்டு இருவரும் இடத்தை காலி செய்துள்ளனர்.
பின்னர் இதனைத் தெரிந்துகொண்ட கடை உரிமையாளர், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சம்பவம் நடந்த அன்று கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் இரண்டு பெண்களும் நகையை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.