சென்னை: தாம்பரம் அடுத்த வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்பு (38) இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராதிகா பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் அவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ராதிகா இன்று (ஆக 25) வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த அதிவேகமாக வந்த ஈச்சர் வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ராதிகாக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் ராதிகாவின் உடலி கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகனங்கள் மெதுவாக வர வேண்டி எச்சரிக்கை பலகைகள் கூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வைக்காதது தெரியவந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் திடீரென வேகத்தைக் குறைக்கும் போது இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பிரதான சாலையில் எச்சரிப்பு பலகை எதுவும் இல்லாமல் சாலைப் பணிகளுள் ஈடுபடுவதை வாகன ஓட்டிகள் கண்டிக்கின்றனர்.
இதையும் படிங்க: பெங்களூரு போலீஸ் பெயரில் போலி ட்விட்டர் - சென்னை மருத்துவ மாணவர் கைது!