சென்னை சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசிம்ம நாயுடு (46). இவர் திருமண தகவல் மையத்தில், திருமணம் செய்து கொள்ளப் பெண் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாராணி (42) பார்த்துள்ளார்.
இதையடுத்து ராஜசிம்ம நாயுடு அதில் கொடுத்திருந்த முகவரி, செல்ஃபோன் எண்ணை வைத்து அவரிடம் பேசிப் பழகியுள்ளனர். ராஜசிம்ம நாயுடு உமாராணியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரிடமிருந்து 27 லட்சம் ரூபாயை ஏமாற்றி வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று உமாராணி கூறியதற்கு, ராஜசிம்ம நாயுடு திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர், ராஜசிம்ம நாயுடு, உமாராணியை நேரில் சந்தித்து வருவதைக் குறைத்துள்ளார்.
ராஜசிம்ம நாயுடுவைக் காண முடியாமல் தவித்த உமாராணி, அவருடைய செல்ஃபோனுக்கு அழைப்பு விடுத்தும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதையடுத்து செய்வதறியாமல் திகைத்து நின்ற உமா ராணி, இச்சம்பவம் குறித்து விளக்குப் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
உமா ராணி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ராஜசிம்ம நாயுடுவைத் தேடி வந்தனர்.
அப்போது, ராஜசிம்ம நாயுடு திருச்சியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, திருச்சி காவல் துறையினரின் உதவியுடன் அவரைப் பிடிப்பதற்காக திருச்சிக்கு விரைந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த ராஜசிம்ம நாயுடுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமான பெண்ணை ஏமாற்றி, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என எண்ணிக்கொண்டிருந்தவர், தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஆசைவார்த்தைக் கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!