சென்னை: அஸ்ஸாம் மாநிலம் கம்ரூப் மலைப்பகுதியில் பிப்ரவரி 15ஆம் தேதி பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இந்த உடலை வைத்து காம்ரூப் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் இளம்பெண் பற்றிய எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதன்பின்னர், இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த சாமி டாலரை கைப்பற்றிய போலீசார் அதன் மூலமாக துப்பு துலக்கையில் அந்த டாலர் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள லிங்க பைரவி கோயிலில் வழங்கப்படும் டாலர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு டாலர் வாங்கிய நபர்கள் குறித்த தகவலை அஸ்ஸாம் போலீசார் வாங்கியுள்ளனர். அதோடு சில சிசிடிவி காட்சிகளையும் அஸ்ஸாம் போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கோயிலில் வந்து சென்ற நபர்களின் வீட்டு செல்போன் எண்களை பெற்ற போலீசார் அதற்கு போன் செய்து பேசியுள்ளனர். அந்த வகையில் சென்னையை சேர்ந்த வயதான தம்பதிகளுக்கு போன் செய்துள்ளனர்.
அப்போது வயதான தம்பதிகள் தங்களின் மகள் வாரணாசிக்கு செல்வதாக கூறி 4 வயது கைக்குழந்தையுடன் சென்றதாக கூறியுள்ளனர். அதன்பின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர். இந்த புகைப்படத்தை வாங்கி ஒப்பிட்டு பார்த்த போது தான் கொலை செய்யப்பட்ட பெண் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த வந்தனா ஸ்ரீ (36) என்பது போலீசருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வந்தனா ஸ்ரீயின் பெற்றோரிடம் அவரது செல்போன் எண்ணை வாங்கி ஆய்வு செய்தபோது ராணுவ லெப்டினண்ட் கர்னல் ஒருவருடன் 138 முறை தொடர்ச்சியாக கால் செய்து வந்ததும் தெரியவந்தது. இவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இருவரின் செல்போன் நம்பர்களும் சில நாட்கள் ஒரே சிக்னலில் பதிவானதும் தெரியவந்தது.
இதனையடுத்து ராணுவ லெப்டினண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியா என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தொடர் விசாரணையில் ராணுவ லெப்டிணண்ட் கார்னல் அம்ரேந்தர் சிங் வாலியா, சென்னையைச் சேர்ந்த இளம் பெண் வந்தனா ஸ்ரீயை கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் கட்டி 31ஆவது தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் சென்னை அடையாறு பகுதி ஜீவரத்தினம் நகர் முதல் தெருவில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்த வந்தனா ஸ்ரீ, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பதும், அதன்பின் அவரது ஆண் நண்பருடன் இருந்து பிரிந்துள்ளார் என்பதும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபரிடம் பணம் கேட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே ஆன்லைன் மூலமாக பழக்கமான ராணுவ லெப்டினண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியா என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின் அவ்வப்போது வந்தனா ஸ்ரீ அஸ்ஸாம் சென்று அவரை சந்தித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வாரணாசியில் கோயிலுக்கு செல்வதாக கூறி ஜனவரி மாதம் 31ஆம் தேதி வந்தனா ஸ்ரீ தனது 4 வயது கைக்குழந்தையுடன் அஸ்ஸாம் சென்றுள்ளார். அங்கு கவுகாத்தியில் ராணுவ லெப்டினண்ட் கர்னல் அமரேந்தர் சிங் வாலியாவுடன் சொகுசு விடுதியில் அறை எடுத்து ஒன்றாக தங்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வந்தனா ஸ்ரீக்கும் ராணுவ லெப்டினெண்ட் கர்னல் அம்ரேந்தர் சிங் வாலியா இருவருக்கும் இடையே திருமணம் குறித்து பேச்சு ஏற்பட்டு இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது. அப்போது, அம்ரேந்தர் சிங் வாலியா தன் கையில் அணிந்திருந்த காப்பால் வந்தனா ஸ்ரீ கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அதில் வந்தனா கழுத்து எலும்பு உடைபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
இந்த கொலையை மறைப்பதற்காக தனது வாகனத்தில் வந்தனா ஸ்ரீயின் உடலை வைத்து, பிளாஸ்டிக் கவரில் சுற்றி கவுகாத்தி அருகே உள்ள கம்ரூப் மாவட்ட பகுதியில் உடலை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதன்பின் 4 வயது பெண் குழந்தையை காரில் அழைத்துச் சென்று கொல்கத்தா ரயில் நிலையத்தில் விட்டுள்ளார்.
இந்த குழந்தையை மீட்டவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் பத்திரமாக சேர்த்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனிடையே வந்தனா ஸ்ரீயின் அவரது பெற்றோர் முன்னிலையில் நேற்று முன்தினம் அஸ்ஸாம் மாநிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நர்சிங் கல்லூரி விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை