சென்னை: புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் லதா என்பவரது வீட்டில் வாடகைக்கு சாந்தி என்ற பெண் குடியிருந்து வந்தார். இந்நிலையில் இன்று (நவ.1) காலை வீட்டின் முற்றத்தில் முறைவாசல் செய்வதற்காக அங்கிருந்த அடிபம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார்.
காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழையானது பெய்து வரும்நிலையில், சாந்தி தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தபோது வீட்டின் மாடியில் இருந்த கழிவறை சுவர் மற்றும் பால்கனி ஆகியன இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய சாந்தி படுகாயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு அப்பகுதியினர் அழைப்பு விடுத்த நிலையில், சுமார் 2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால்தான் ரத்தம் அதிகமாக வெளியேறி பெண் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வந்து பெண் உயிரிழந்ததை மருத்துவர் உறுதி செய்த நிலையில், பெண்ணின் உடலானது ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. முழு விவரம்