சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலாஜி(வயது 36) - ஐஸ்வர்யா(வயது 33) இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பாலாஜி அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஐஸ்வர்யா சென்னை விமான நிலையத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்குப் படம் பார்ப்பதற்காகத் தனது மகன், மகளையும் அழைத்துச் சென்றுள்ளார். படம் ஓடிக்கொண்டிருந்த போது, தனது பிள்ளைகளிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு ஐஸ்வர்யா வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் திரையரங்கம் அருகே உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கின் நான்காவது மாடியிலிருந்து ஐஸ்வர்யா கிழே குதித்தாக தெரிகிறது. தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐஸ்வர்யாவை மீட்ட பார்க்கிங் பாதுகாப்பு ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் விமான நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ஐஸ்வர்யாவைப் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் உடலை மீட்ட சென்னை விமான நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐஸ்வர்யா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? ஏன் 4-வது மாடிக்குச் சென்றார் என்பது குறித்து அங்கிருந்த சிசிசிடி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.