சென்னை: பல்லாவரம் அடுத்த பாரதி நகர் மலைமகள் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சத்தியவாணி (55). அவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். சத்தியவாணி மற்றும் அவரது கணவர் ஆகிய இரண்டு பேரும் அவரின் மருமகன் வீட்டில் நான்கு பக்கம் சுவர் கட்டப்பட்டு கூரையால் வேயப்பட்டிருந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு (செப்.24) சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. அவர்களது பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மழையால் முற்றிலுமாக நனைந்து இருந்த நிலையில், இவரது வீட்டின் மீது பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மலைப்பகுதி என்பதால் காம்பவுண்ட் சுவருக்கு முறையான பில்லர்கள் இல்லாததால் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் பாரம் தாங்காமல் இவரின் வீட்டின் மீது இடிந்து விழுந்தது.
இதனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சத்தியவாணி இடிபாடுகளுக்குள் சிக்கி சத்தியவாணி உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வீட்டின் சுற்றுச்சுவர் அவரின் மேலே விழுந்து அவர் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிய சத்தியவாணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேடவாக்கத்தில் தேங்கும் மழை நீர்!... எப்போது தான் தீர்வு?.. அவதியில் மக்கள்!