சென்னை அமைந்தகரை முத்துமாரி அம்மன் காலனியை சேர்ந்தவர் பவானீஸ்வரி(18). அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் எனும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி திருவேற்காடு கோயிலில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அதே தெருவில் பதினைந்து நாட்களுக்கு முன்னர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே கார்த்திக்கும், பவானீஸ்வரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதன் காரணமாக பவானீஸ்வரி, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜுன்.15) கார்த்திக், பவானீஸ்வரியை சமாதானம் செய்ய சென்றுள்ளார்.
ஆனால், மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்துடன் தனது அறைக்கு சென்ற பவானீஸ்வரி தாழிட்டுக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது பவானீஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனே கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள் பவானீஸ்வரியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவானி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.
திருமணமான நாற்பது நாட்களில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதன் காரணமாகவே பவானீ ஸ்வரி உயிரிழந்தார் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற இருப்பதாகவும் காவல்துரையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாணவியின் கையை பிடித்து இழுத்த இளைஞர் : ஓட ஓட விரட்டி கொலை செய்த தந்தை!