சென்னை: குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர், கல்யாணி (வயது 55). இவர் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் பகுதி நேர ஓட்டுநராகப் பணி செய்து வந்தவர், மகேஷ். கல்யாணியின் மகள் 2021ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மகளுக்கு எப்படியாவது, மருத்துவச் சீட் வாங்கித் தர வேண்டும் என்று கல்யாணி எண்ணி உள்ளார்.
இதனை அறிந்த ஓட்டுநர் மகேஷ், மருத்துவர் கல்யாணியிடம் தனக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள ரூபி ஜோசப் (வயது 45) என்பவரை தெரியும் என்றும்; அவரை அணுகினால் மருத்துவச் சீட் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூறி உள்ளார். தனது மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதற்கு கல்யாணி சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து ரூபி ஜோசப்பை, கல்யாணிக்கு மகேஷ் அறிமுகப்படுத்தி வைத்து உள்ளார்.
மேலும், ரூபி ஜோசப் என்பவர், தனக்கு தேசிய மருத்துவ கவுன்சிலில் முக்கிய பிரமுகர்களைத் தெரியும் என்றும், அவர்கள் மூலம் மருத்துவச் சீட் வாங்கித் தருவதாகவும் உறுதி கூறி உள்ளார். பின்பு, கல்யாணியிடம் இருந்து சிறிது சிறிதாக மொத்தம் 27 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி உள்ளார். ஆனால், மருத்துவச் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றி உள்ளார்.
இதையும் படிங்க: நூதன முறையில் ரூ.90 லட்சம் பறிமுதல்.. 6 பேரை அதிரடியாக கைது செய்த காவலருக்கு குவியும் பாராட்டு!
இதனால் மருத்துவர் கல்யாணி தான் கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பிக் கேட்டு உள்ளார். ஆனால், ரூபி ஜோசப் தகுந்த பதில் ஏதும் கூறவில்லை என்றும்; மேலும் கல்யாணியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கல்யாணி இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கல்யாணி புகார் அளித்து உள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் ரூபி ஜோசப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் ரூபி ஜோசப் குரோம்பேட்டை பகுதியில் இருந்து கொண்டே திட்டம் தீட்டி கல்யாணியை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரூபி ஜோசப்பிடம் போலீசார் இது போன்று வேறு யாரிடமாவது பணம் வாங்கி மோசடி செய்துள்ளாரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பரிசுப் பொருள் அனுப்பியதாகக் கூறி 1.22 லட்சம் மோசடி; நட்பாகப் பழகி கைவரிசை காட்டும் நைஜீரிய கும்பல்!