சென்னை: மேற்கு தாம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மூன்று வயது மகளுடன் தாம்பரத்தில் இருந்து காந்தி நகரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக தடம் எண் 89 டீ மாநகர பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்து நிலையத்தில் இறங்கியபோது சிறுமியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சிறுமியிடம் கேட்டபோது, தனக்கு பின்னால் நின்றிருந்த பெண் ஒருவர் தனது செயினை திருடியதாக அடையாளம் காட்டினார்.
உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் கேட்டபோது அவர் திருடிய செயினை வாயில் வைத்திருந்து தெரியவந்தது. தொடர்ந்து அவரை தாம்பரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் நடுவீரன்பட்டைச் சேர்ந்த அம்பிகா (35) என்பதும், இது போன்று பேருந்தில் சிறுவர்கள் அணிந்திருக்கும் தங்க செயினை லாவகமாக திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து திருடிய செயினை பறிமுதல் செய்த காவல் துறையினர், உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அம்பிகாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை: 4 பேர் சேலத்தில் கைது