ஜனநாயக நாடான இந்தியாவில், உரிமைகளுக்கு அச்சாணி வாக்குகள்தான். நம் மாநிலத்தை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிப்பது முதல் அடிப்படை தேவைகள் நமக்கு முறையாக கிடைப்பது வரை ஒவ்வொருவருடைய வாக்குகளும் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு வேட்பாளர் லட்சக்கணக்கில ஓட்டு வாங்கிருந்தாலும் கூட, நீங்களோ, நானோ போடும் ஒரு ஓட்டுதான், அவரது நிலையை தலைகீழாக மாற்றும். அப்படிப்பட்ட வாக்குகளை, வீணாக்குவது தகுமா?
நிச்சயம் தகாது தான். அதனால்தான் தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், வாக்காளர்களின் சந்தேகங்களையும் எளிமையாக தீர்த்து வருகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, அதை இணையத்திலேயே பெறலாம். இ-வாக்காளர் அட்டைகளையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆன்லைனில் இ-வாக்காளர் அட்டை
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாமின் போது வாக்காளர் பட்டியலில் பெயரை இணைத்தவர்கள், அப்போது தாங்கள் வழங்கிய மொபைல் எண்ணைக் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் http://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
இணையத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய அதனுடைய எண் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நபர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்ததும், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான குறுந்தகவல் மொபைலுக்கு வரும். அதில் இபிஐசி எனப்படும் வாக்காளர் அடையாள எண் இருக்கும். அதை வைத்துத்தான் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
செயல்முறை
முதலில் http://www.nvsp.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லுங்கள். உங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள். பிறகு, புதிய பயனாளர் முகவரியை (யூசர் ஐடி) உருவாக்குங்கள்.
புதிய பயனாளர் முகவரியைக் கொண்டு உள் நுழைந்து, வாக்காளர் அடையாள எண் அல்லது அது தொடர்பான குறுந்தகவலில் வந்த எண்ணைப் பதிவு செய்யுங்கள். உங்களது மாநிலத்தையும் பதிவு செய்து, வாக்காளர் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் வாக்களிக்க முடியுமா?
அடையாள அட்டை இல்லாதவர்கள் (அ) வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
ஆவணங்கள்
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய- மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம், பான்கார்டு, தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை, தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை, புகைப் படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப்பேரவை- நாடாளுமன்ற அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
இதையும் படிங்க:திமுக தேர்தல் அறிக்கை; கவர்ச்சிகர அறிவிப்புகளா? வறுமை ஒழிப்புத் திட்டங்களா?