சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்குவதற்கு, மாவட்ட அளவில் பாடப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் 2023 -24-ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் 7-ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் ஏற்கனவே அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3 கோடியே 18 ஆயிரத்து 66 புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில், மூன்று முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான புத்தகமும், எட்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டிற்கான புத்தகமும் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான விற்பனைக்கு ஒரு கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவதற்கு ஏற்ப பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கான ஷூ தற்போது சேர்நகரில் உள்ளதாகவும், அதனையும் சோதனை செய்த பின்னர் அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1,554 தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 500 கோடி செலவில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அடிப்படையில் உணவு வழங்குவதற்குரிய நிறுவனங்களை தேர்வு செய்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு பிரச்சனையா? : அண்ணாமலை கண்டனம்!