சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2வது சீசனில் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு 6 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அத்துடன் இதன் மூலம் அவர் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய மாஸ்டர் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.
தனி பயிற்சி இல்லை: இந்த வெற்றி குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரணவ் கூறியதாவது, "முதல்முறை சென்னையில் விளையாடினேன். இந்த போட்டி தொடரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடரில் சாவால் நிறைந்த போட்டியாளர்கள் பலர் இருந்தனர்.
தொடரை வெற்றி பெற வேண்டுமென்றால் இறுதிப் போட்டியில் டிரா செய்தாலே போதும் என இருந்தது. ஆனால் அதுவே எனக்கு பதட்டமாகவும், சவாலாகவும் இருந்தது. இருப்பினும் சரியான முறையில் விளையாடி இறுதியில் வெற்றி பெற்றேன். இந்தத் தொடர் முடிந்த பிறகு அடுத்தது கத்தார் 'மாஸ்டர்ஸ்' தொடரில் விளையாட இருக்கிறேன்.
பிறகு இந்த ஆண்டு இறுதியில் 18 வயதுக்குட்பட்ட தொடரில் விளையாட இருக்கிறேன். என்னுடைய இலக்கு எல்லாம் ரேட்டிங்கை உயர்த்துவது தான். அதற்காக பல தொடர்கள் விளையாட இலக்கு வைத்துள்ளேன். உலக தொடர்களுக்கு என தனி பயிற்சி எல்லாம் செய்வதில்லை.
ஆனால் கடந்த போட்டிகளில் விளையாடும் போது ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து விளையாடத் திட்டமிட்டுள்ளேன். சென்னையில் உலகத்தரம் வாய்ந்த போட்டி தொடர்கள் நடத்தியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அடுத்த வருடம் நடைபெறும் மாஸ்டர்ஸ் போட்டிக்கு இந்த போட்டி வலுவானதாக அமையும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை".. சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம் உருக்கம்!
பிரணவிற்கு உறுதுணையாக இருப்பேன்: இதனைத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற பிரணவின் தந்தை வெங்கடேசன் கூறுகையில், "மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் கடைசி போட்டியை வெற்றி பெற்று சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒரு அழுத்தம் இருந்தது. என் மகன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். பிரணவ் சிறு வயது முதலே செஸ் விளையாட்டை விளையாடத் தொடங்கினார்.
ஒரு அழைப்பிதழைக் கொடுக்க எங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்றோம். அப்போது அங்குள்ள செஸ் விளையாடிக் கொண்டு இருந்தனர். அதனை பார்த்த பிறகுதான் செஸ் விளையாட தொடங்கினார் பிரணவ். எங்களுடைய குடும்பத்தில் யாரும் செஸ் விளையாட்டில் பெரியதாக சாதித்தது கிடையாது.
பிரணவ், ஷாம் சுந்தரிடம் பயிற்சி பெற்று வருகிறார். மாஸ்டர்ஸ் போட்டிகளில் விளையாடுவதற்கு இன்னும் நிறைய பயிற்சிகள் பெற்று கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை அனைத்தையும் தற்போது கற்று வருகிறார். சென்னை செஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்று அடுத்த மாதம் கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கிறார்.
அது முடிந்த பிறகு 'அண்டர் 18' இல் ஒரு போட்டியில் பங்கு இருக்கிறார். இந்த தொடர்களில் பங்கேற்று விளையாடும் அனுபவத்தை வைத்து நன்றாக விளையாடுவார் என நினைக்கிறேன். பிரணவ் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரே உறுதுணையாக நான் இருப்பேன். அவருடைய ஆசை தான் என்னுடைய ஆசையாக இருக்கிறது. அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் மாஸ்டர் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்தார்.