தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சரியாக 10 நாள்கள் இருக்கின்றன. இதனால் களத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பத்து வருடங்களாக கைக்கெட்டாத அரியணையை மீண்டும் பிடிக்க திமுகவும், தற்போது வைத்திருக்கும் அரியணையை விடாமல் இருக்க அதிமுகவும் களத்தில் குதித்திருக்கின்றன. அதேபோல், பாஜகவும் தனது கொடியைப் பறக்க வைப்பதற்காக அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து 20 இடங்களைப் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலைக் குறிவைத்து பாஜக சில வருடங்களுக்கு முன்னரே தனது பணிகளைத் தொடங்கிவிட்டது.
தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக நியமித்துவிட்டு எல். முருகனை தமிழ்நாடு பாஜக தலைவராக அமரவைத்தது கட்சியின் டெல்லி தலைமை. தன்னை தேர்ந்தெடுத்தது நியாயம்தான் என்பதை தலைமைக்கு உணர்த்தும் விதமாக திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிக்காரர்களை பாஜகவில் இணைத்தார் முருகன்.
அதுமட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்து கட்சியின் நிலைமையைத் தெரிந்துகொண்டு சென்றார்.
நடக்கவிருக்கும் தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் பாஜக ஆயிரம் விளக்கில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலனுக்கு எதிராக சமீபத்தில் கட்சியில் இணைந்த குஷ்புவைக் களமிறக்கியுள்ளது.
அதேபோல் திமுகவிலிருந்து இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கும், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலைக்கு அரவக்குறிச்சியும், அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் எல். முருகனுக்கு தாராபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மட்டுமின்றி பாஜகவின் 20 வேட்பாளர்களும் தங்களது பரப்புரையில் வேகம் காட்டிவருகின்றனர். நிலைமை இப்படி இருக்க ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்பு, ஆயிரம் விளக்கில் மலரும் தாமரை என்ற வாசகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், தனது புகைப்படத்தையும் மட்டும் ட்விட்டரில் முகப்புப் படமாக வைத்திருக்கிறார்.
அந்த முகப்புப் படத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமோ, அமித் ஷாவின் புகைப்படமோ இடம்பெறாதது கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிட் நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டது. அதிலும், ஜெயலலிதா, ஈபிஎஸ், ஓபிஎஸ், எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் படங்களும், வானதியின் புகைப்படமும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரமும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
நீட் தேர்வு, ஜிஎஸ்டி, எட்டு வழிச்சாலைத் திட்டம், புதிய கல்விக் கொள்கை, சிஏஏ, கேஸ், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு என மத்திய பாஜக மீது தமிழ்நாடு மக்கள் உச்சபட்ச அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தியை எப்படி சமாளிப்பதென்பதே பாஜக வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக தொகுதியில் வேலை செய்யும் கூட்டணிக் கட்சிக்காரர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
அதுவும் ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டையாக இருப்பது. மு.க. ஸ்டாலின் வென்ற தொகுதி. அந்தத் தொகுதிக்குள் மோடியை வைத்து பெரிதாக விளம்பரம் செய்தால் அது மேற்கொண்டு அதிருப்தியைச் சம்பாதித்துக்கொடுத்துவிடுமோ என்ற சந்தேகத்தில் குஷ்பு இவ்வாறு செய்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஆனால் அந்தத் தொகுதியை பாஜகவுக்கு அதிமுக தலைமை ஒதுக்கியதை தொண்டர்கள் ரசிக்கவில்லை. அதனால் அவர்கள் போராட்டமும் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் டெல்லி பாஜக மீதான அதிருப்தி கோவையிலும் இருக்கத்தான் செய்யும். அதனால் அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என கருதியதால்தான் தொண்டர்களின் அந்தப் போராட்டம்.
இந்தத் தேர்தலில், கொங்கு மண்டலம் அதிமுகவின் கையை விட்டு சென்றாலும் சென்றுவிடும் என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்போது வானதிக்கு ஆதரவாக அதிமுக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பிட் நோட்டீஸில் மோடி, அமித் ஷாவின் புகைப்படங்கள் இடம்பெறாதது ஒருவகையில் நல்லதுதான் என்ற பேச்சும் தொண்டர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.
அதிமுகவின் கூட்டணிக்குள் பாஜக இருப்பதால் தேர்தல் சமயத்தில் இதை சகித்துக்கொள்ள வேண்டிய நிலையில் பாஜக இருந்தாலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை களத்தில் மோடியும், அமித் ஷாவும் ஒதுக்கப்படுவது பாஜகவினர் மத்தியில் நிச்சயம் ஒரு சோர்வை ஏற்படுத்தும் என்பதே கள யதார்த்தம்.
இதையும் படிங்க: கோட்டைக்குள் இதுவரை எத்தனை முறை தாமரை மலர்ந்திருக்கிறது?