சென்னை: சூளைமேடு கண்ணகி தெருவில் வசித்து வந்தவர் செல்வம்(42). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வம், கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செல்வத்தின் உறவினர் வீரபாண்டியன் என்பவர் சூளைமேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வம் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்ததும், இதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனால் உடனடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியை தேடினார்கள்.
தலைமைறைவாக இருந்த விஜயலட்சுமியை மடக்கி பிடித்தனர். மேலும், விஜயலட்சுமி உடன் இருந்த மோகன் என்ற முண்டக்கண்ணு என்பவரையும் போலீசார் பிடித்தனர். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வேலைக்கு மெட்ரோ ரயிலில் செல்லும்போது விஜயலட்சுமிக்கும், மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம், செல்வத்துக்கு தெரியவந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். தகாத உறவை கைவிடும்படி கூறியுள்ளார். இதனால் விஜயலட்சுமியும், மோகனும் சேர்ந்து செல்வத்தை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
சாப்பிடும் பழைய சோறில் விஜயலட்சுமி பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட செல்வம் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த விஜயலட்சுமி, செல்வம் மதுபோதைக்கு அடிமையாகி உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்த்ததாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையிலும், தீவிர விசாரணையிலும் விஜயலட்சுமியும், கள்ளக்காதலன் மோகனும் வசமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.
சந்தேக மரணத்தை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், விஜயலட்சுமி, அவரது கள்ளக்காதலன் மோகன் இருவரையும் கைது செய்தனர். மோகனின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டமாகும். மோகன் மீது சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் 7 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட விஜயலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இரண்டு குழந்தைகளும் உறவினர் வீடுகளில் வளர்ந்து வரும் நிலையில், சூளைமேடு வீட்டில் யாரும் விஜயலட்சுமியை சேர்த்து கொள்ளவில்லை. பிள்ளைகளும், தாயுடன் வராததால் பார்த்தசாரதி கோவில் அருகே தங்கி கொண்டு, கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் சற்று மனதளவில் பாதிக்கப்பட்டது போல இருந்தவர் தனக்கு தானே பேசி கொண்டு அந்த பகுதியிலே சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தெப்பக்குளத்தில் உள்ள சிறிய கேட் வாயிலாக உள்ளே நுழைந்து குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். விஜயலட்சுமி உயிர் இழந்த நிலையில் அவரது உடலை அடையாளம் காட்டவோ, வாங்கவோ அவரது உறவினர்கள் முன்வரவில்லை. கணவருக்கு துரோகம் இழைத்து, அவரை கொலை செய்ததால் யாருடைய ஆதரவும் இல்லாமல் குற்ற உணர்வில் விஜயலட்சுமி தனது உயிரை மாய்த்துகொண்டார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியின் காதை வெட்டிய கணவர்.. சென்னையில் நடந்தது என்ன?