சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசெல்வன் (32). நாகல்கேணியில் உள்ள லெதர் கம்பனியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வகிதா ப்ளோரா (30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று ஞானசெல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடி 1000 ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வகிதா ப்ளோரா தனது அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் ஞானசெல்வன் கூச்சலிட்டதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது வகிதா ப்ளோரா தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர்நகர் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக உள்ளது’ - முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்