சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (ஏப். 21) காவல் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதில் உரையை அதிமுகவினர் புறக்கணித்து அவை வெளி நடப்பு செய்தனர். அதன் பின்னர் அதிமுகவின் சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இன்று காலை சபாநாயகரை சந்தித்து நேற்றைய இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் எங்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
திமுக எதிர்க் கட்சியாக இருந்த போது முன் வரிசையில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகிலேயே சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை வழங்கி அமர வைக்கப்பட்டனர். பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை வழங்க மறுக்கிறார்கள்.
எங்களது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் கோரிக்கையை சபாநாயகர் ஜனநாயக முறைப்படி அங்கீகரிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் எங்களை விட குறைவான உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் அவர்களுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கி முன் வரிசையில் அமர வைத்துள்ளார்.
பொது கணக்கு குழு தலைவர் பதவி எப்போதும் பிரதான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும். எங்கள் ஆட்சியில் கூட அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல இந்த முறை பொது கணக்கு குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்க வலியுறுத்தினோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேபினட் அந்தஸ்துள்ள பதவியாகும். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பல்வேறு கோரிக்கைகளை கூறுகிறார். ஆனால் அதை நேரலை தருவதில்லை. மக்கள் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை youtubeஇல் நேரலை செய்யாததை கண்டித்து தொடர்ந்து பத்தாவது நாளாக அதிமுக வெளிநடப்பு செய்தது.
youtubeஇல் நேரலை செய்வதற்கு எவ்வித பொருட் செலவோ தொழில்நுட்ப வசதிகளோ கூடுதலாக தேவையில்லாத நிலையில் வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கள் நேரலை செய்ய மறுக்கப்படுகிறது. எங்களது கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் பதிலுரையை மட்டுமே புறக்கணிப்பதை போல இன்று முதலமைச்சர் பதிலுரையையும் புறக்கணித்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, கொடநாடு கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக ஐஜி தலைமையிலான விசாரணை 90% முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு திமுக அரசு மாற்றியிருப்பதாக தெரிவித்தார். கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் வாதாடி ஜாமீன் பெற்று கொடுத்ததாகவும், மேலும் கொடநாடு வழக்கை காட்டி திமுக அதிமுகவை மிரட்ட பார்ப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் - இந்திய தணிக்கை துறை!