சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் 259 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கிட்டத்தட்ட சுமார் 80 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் வீடுகளை அகற்ற வேண்டாம் என கண்ணையன் என்ற முதியவர் தீக்குளித்து இறந்துள்ளார்.
இது குறித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி நேற்று(மே11) அப்பகுதியை ஆய்வு செய்து, மக்களிடம் உள்ள குறைகளைக் கேட்டறிந்தார். பின்பு இறந்த முதியவர் கண்ணையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் ஆறுதல் கூறினார்.
மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிந்தசாமி நகர் குடியிருப்புகளை இடிக்கவேண்டிய அவசியம் என்ன?. பக்கிங்காம் கால்வாயிலிருந்து 70 அடி தள்ளி இருக்கும் குடியிருப்புகளை அகற்றுபவர்கள், 30 அடி தள்ளி இருக்கும் வசதியானவர்களின் வீடுகள் மீது கைவைக்கவில்லை. ராஜீவ்ராய் எனும் முதலாளியின் வீடுகள் அதிக விலைக்கு விற்பனையாக வேண்டும் என்ற காரணத்தினால் 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசால் குடிசைப்பகுதி என குறியிடப்பட்ட பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது அராஜகமானது.
நீதிமன்ற உத்தரவுகள், கார்ப்பரேசன் அதிகாரிகள் ஆகியோரின் குடியான மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளைக்கொண்டு சாமானிய மக்களை அணுகாமல் இது மக்கள் சார்ந்த பிரச்னையாக அணுகி, கொள்கை நிலைப்பாடை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தீர்ப்பினை சட்டரீதியாக அரசே எதிர்கொண்டு சாமானிய மக்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அம்மக்களுக்கு குடியிருப்பினை அப்பகுதியில் உறுதிசெய்வதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியானது, அம்மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தாமல் இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும். சாமானிய மக்களோடு நிற்க வேண்டிய பொறுப்பு இந்த அரசிற்கு உண்டு.
ஆகவே, இம்மக்களை அப்புறப்படுத்தி அரசு சாதிக்கப்போவது மக்களின் அவநம்பிக்கை மற்றும் வெறுப்பினை சம்பாதித்து கொள்வதைத் தவிர வேறொன்றும் இல்லை" எனத் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் மாற்று சமுதாயத்த சார்ந்த பெண்ணை திருமணம் செய்தவருக்கு அடி உதை