சென்னை: தமிழ்நாட்டில் அரசு கேபிள் டிவியை பல லட்சக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாகவே அரசு கேபிள் டிவி சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனம் சரிவர செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. கடந்த 19-ஆம் தேதி முதல் பல லட்சம் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்கள் முழுமையாக செயலிழந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்களை பழைய நிலைக்கு கொண்டு வர முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மேலும் இதற்கான காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
*மந்த்ரா பாலாஜி செய்த மோசடி*
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2016ஆம் ஆண்டு மந்த்ரா பாலாஜி என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து 36 லட்சம் செட் ஆப் பாக்ஸ்களை வாங்கியது. அதற்குரிய தொகை ஒப்பந்த விதிகளின்படி முழுமையாக வழங்கப்பட்டு விட்டது.
*ரூ.612 கோடி மதிப்பு*
மொத்தம் ரூ.612 கோடியில், தாமத விநியோகத்திற்கான இழப்பீடு மற்றும் குறைவாக செலுத்தி விட்டு அதிகமாக பெற்ற சுங்க வரித்தொகை ரூ.57 கோடியை சட்ட விதிகளின்படி கழித்து விட்டு மீதம் ரூ.555 கோடி வழங்கப்பட்டு விட்டது. செட்டாப் பாக்ஸ்களை பராமரிப்பதற்கான மென்பொருள் சேவை கட்டணமும் நாளாவது தேதி வரை செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாடு ஒப்பந்த சட்ட விதிகளின்படியும் சுங்கத்துறையில் குறைவாக கட்டிவிட்டு கேபிள் டிவி நிறுவனத்திடமிருந்து அதிகமாக பெற்ற கூடுதல் கட்டணத்தை, மாநில கணக்காயர் அறிக்கையின்படியும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் பிடித்தம் செய்ததை மீண்டும் வழங்கக் கோரி அவ்வப்போது இந்த நிறுவனம் பிரச்சனை செய்து வந்தது.
*சட்டவிரோதமாக செட்டாப் பாக்ஸ்கள் முடக்கம்*
இந்நிலையில் மென்பொருள் சேவையை பராமரிப்பதற்காக இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை முடக்கியுள்ளது. 22 லட்சம் செட்டாப் பாக்ஸ்களின் இயக்கத்தை சட்ட விரோதமாகவும் வணிக நெறிமுறைகளுக்கு எதிராகவும் முடக்கியுள்ளது கிரிமினல் குற்றமாகும்.
எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மீண்டும் இயங்க வைப்பதற்கான தொழில் நுட்ப பிரச்சனையை சரி செய்யவும் கேபிள் டிவி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில் நுட்ப உதவிக்கு மாவட்ட வாரியாக துணை மேலாளர்கள் எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*துணை மேலாளர்கள்*
மாரிமுத்து - 9498017289
காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர்.
சுரேஷ் - 9498017212
கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, திருப்பூர்.
கெளதம் ராஜ் - 9498002607
தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர்.
மும்தாஜ் பேகம் - 9498017287
அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுகோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்.
அருள் பிரகாஷ் - 9498017283
சென்னை
இதையும் படிங்க: 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனச் சேவைகளை முடக்கியுள்ளது' - ஓபிஎஸ்