சென்னை: சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று நண்பகல் மக்கள் நீதி மய்யத்தின் வழக்கறிஞர்கள் அணி கூட்டம் சென்னை தி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மாலையில் மய்யம் மாதர் படை சார்பில் மய்யம் மாதர் சங்கமம் என்ற நிகழ்ச்சி அடையாரில் உள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் கமல் பேசியதாவது; "நான் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது எனது சகோதரர் ஆசை. எனது குடும்பத்தில் 12 பேர் வழக்கறிஞர்கள். இந்திய விடுதலைப் போரில் வழக்கறிஞர்கள் பங்கு முக்கியமான ஒன்று. ஆனால், இப்போது நம் நாடு மீட்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. மீட்பதற்கான வேலையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்குவோம்.
நான் அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன். நான் அரசியலுக்கு வந்தது நேர்மையான காரணத்திற்குதான். நான் நினைத்த தமிழ்நாட்டை உருவாக்க நானே களம் இறங்கியுள்ளேன். தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்றத்துக்கான டிஜிட்டல் நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
கறுப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன். நல்லவர்கள் எங்கிருந்தாலும் மக்கள் நீதி மய்யத்திற்கு வர வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடமை தவறினால் ராஜினாமா செய்வார்கள். தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்குவோம் அதில் நானும் கையெழுத்திடுவேன்" என்றார்.
'ஏன் கடவுள் மீது தவறான எண்ணம் இல்லை'
மாலை மய்யம் மாதர் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்," இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் பெண்கள் இருந்தார்கள். காந்தியின் கைத்தடிகளாக பெண்கள் இருந்தார்கள். பெண்கள் ஆடை அணியும் முறைதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என்றால் சில கடவுள்கள் உடை அணிவதில்லை. ஏன் கடவுள் மீது தவறான எண்ணம் இல்லை. அங்கு தோன்றாத உணர்வு என் அக்கா, தங்கைகள் குறைவாக உடை அணிந்தால் மட்டும் ஏன் ஒரு சில மிருகங்களுக்கு தோன்றுகிறது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை. பெண்களுக்கு விவசாய பட்டம் வழங்க வேண்டும். மநீம வெற்றிபெற்றால் சட்டப்பேரவையில் 50 விழுக்காடு பெண்கள் இருப்பார்கள். மேலும், அதிக இடங்களில் பெண்களுக்கு கழிவறை கட்டப்படும்" என்றார்.
இதையும் படிங்க: குப்பை கொட்ட காசு கட்ட வேண்டுமா - ஸ்டாலின் கடும் விமர்சனம்