சென்னை: தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 முதல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்காததால் காய்கறி விற்பனை, தண்ணீர் கேன் போடுதல், மாவு அரைக்கும் ஆலையில் வேலை ஆகியவற்றினை செய்து வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பணி நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டதால் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இவர்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் தங்களுக்கு பலன் இல்லை என கூறுகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருந்தும் தற்காலிக ஆசிரியர்களை பணியில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்டதாரி ஆசிரியர் பணியில் 1874 பேர் , இடைநிலை ஆசிரியர் பணியில் 3987 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013இல் தகுதிப் பெற்ற பிரியா கூறும்போது, 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிமரப்படுகிறேன். இதனால் மாவு அரைக்கும் இயந்திரம் போட்டு அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறேன் என கூறினார்.
ராணிப்பேட்டை சேர்ந்த ரவி வீடுகளுக்கு குடிநீர் கேன் போட்டு வருகிறார். அவர் கூறும்போது, 2013, 2017ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் இதுவரை பணி வழங்கவில்லை. ஆசிரியர் பணி கிடைக்கும் என காத்திருந்தேன். கடந்த ஆட்சியில் வேலை கிடைக்கவில்லை. அதனால் தனியார் பள்ளியில் வேலைக்கு சென்றேன். கரோனா காரணமாக அந்தப் பள்ளியிலும் பணி வழங்க முடியாது என கூறிவிட்டனர். தற்போது வீடு வீடாக குடிநீர் கேன் போட்டு வருகிறேன். தற்காலிக ஆசிரியர்களுக்கு 7500 ரூபாய் சம்பளம் என கூறுகின்றனர். அந்த சம்பளமும் போதாது. எனவே தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து முனுசாமி கூறும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது, ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என கூறினார். ஆனால் தற்பொழுது ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வினை அறிவித்துள்ளனர். முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையை நம்பித் தான் வாக்களித்தோம். எனவே அதனை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அரசு பணியில் பின் வாசல் வழியாக வந்தவர்களை எந்த சூழலிலும் நிரந்தரமாக்க கூடாது - உயர் நீதிமன்றம்