நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போதுவரை தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனைத் திறப்பது குறித்து இதுவரை எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும், அது குறித்து முதலமைச்சர்தான் அறிவிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் ஊரடங்கை மீண்டும் நீடிப்பது குறித்து முதலமைச்சர் மருத்துவத்துறையின் உயர்மட்டக்குழுவினருடன் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது மருத்துவ உயர்மட்டக்குழுவினர் , தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று பரவுவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையும் தொடங்கி உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதும் முடியாது. எனவே பள்ளிகளை டிசம்பர் வரையில் திறக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
மருத்துவக் குழுவின் வழிமுறைகளின்படி வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக துவங்கி இருப்பதன் காரணமாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரையாண்டு தேர்வுக்கான பணிகள் தற்பொழுது வரையில் தொடங்கப்படாமல் உள்ளதால் அதுவும் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரி திறப்பது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்பொழுது தீபாவளி பண்டிகையின்போது பொது மக்கள் அதிகளவில் கூடுவதால் தொற்றின் தாக்கம் அதிகரிக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில்தான் கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு செய்ய முடிவும். எனவே நவம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படாது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...வவ்வால்களுக்கு சரணாலயம் அமைத்து பாதுகாக்கும் கிராம மக்கள்...!