சென்னை எழும்பூரிலுள்ள நல்வாழ்வு மற்றும் குடும்பநலப் பயிற்சி மையத்தில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் 25ஆம் ஆண்டு தொடர் சேவை மற்றும் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நல்வாழ்வுத் துறைச் செயலர் பீலா ரஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறப்பாகச் சேவையாற்றியவர்களுக்கு அமைச்சர் விருதுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தொடங்கப்பட்டது. இன்றுடன் அது தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் நிகழ்வுகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எய்ட்ஸ் நோய்த்தோற்று இந்தியளவில் உள்ளதை விட தமிழ்நாட்டில் 0.27 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எய்ட்ஸ் நோய் தாயிடமிருந்து பிறக்கும் குழந்தைக்கு வராத நலையை 25 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளோம். தாயிடமிருந்து குழந்தைக்கு நோய்த்தொற்று வருவதை தடுப்பதில் உலகளவில் கியூபா நாட்டிற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 32 மாவட்டங்களில் குழந்தைகள் இளைப்பாறுதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. விருதுநகர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நாளை மறுதினம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதுடன் விரைந்து அடிக்கல் நாட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை இந்தாண்டு அரசு மருத்துவக் கல்லூரியாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட மருத்துவக் கல்லூரி இனிமேல் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும். மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கான அரசு கட்டணம் குறித்து ஆய்வுசெய்து அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இல்லை. சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டுவருகிறோம். கொரோனா வைரஸ் தொடர் கண்காணிப்பில் இருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 786 பேர் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பு முடிந்தது வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவாரூர் மருத்துவமனையில் மூளை, தண்டுவட நோய்களுக்கான சிகிச்சை தொடக்கம்