எபோலா, ஜிகா, நிபா, மெர்ஸ் மற்றும் சார்ஸ் ஆகியவற்றின் வரிசையில் மேலும் ஆபத்தான ஒரு நோய்க் கிருமி உலகத்தைப் புரட்டி எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்று 2019ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. 114 நாடுகளில் 53 நிறுவனங்களைக் கொண்டு தொற்றுநோய்ப் பரவலின் மூலகாரணத்தை ஆராய்ச்சி செய்யும் உலக சுகாதார நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டின் இறுதியில் மக்களிடையை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி அவர்களின் உயிரைப் பதம் பார்த்தது கரோனா வைரஸ்.
இது உலகம் முழுவதையும் தாக்கிப் பெரும் சமூக, பொருளாதாரச் சீரழிவுகளை உண்டாக்கி, இதுவரை 1.55 லட்சம் உயிர்களை பலி கொண்டது. இந்தியாவில் மட்டும் சுமார் 1.08 கோடி மக்களுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த அகில உலகத் தொற்று இப்போதுதான் குறைந்து வருவது போன்ற அறிகுறிகளை தென்படுகிறது. மரணவிகிதம் குறைவான நிலைக்கு இறங்கிவிட்டது என்றாலும், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நிகழ்ந்த கரோனா மரணங்களால் இன்றளவும் அந்நாட்டு அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த முன்வரவிடாமல் செய்துள்ளது. வல்லரசு நாடுகளிலே இந்த நிலை என்பதனாலேயே இந்திய அரசு தடுப்புமருந்து செலுத்தும் செயல்பாட்டை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆரம்பத்தில் தடுப்புமருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட்டது. சுமார் 55 விழுக்காடு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்புமருந்தை எடுத்துக் கொண்ட போதிலும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும், தூய்மைப் பணியாளர்களும் 4.5 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள முன்வந்தனர்.
உலக சுகாதாரம் இன்று எதிர்கொண்டிருக்கும் பத்து பெரிய சவால்களில் தடுப்பு மருந்து பற்றிய தயக்கம் என்பது ஆகப்பெரிய சவால் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாகப் பேசியிருக்கிறது. அதனால் மத்திய அரசு பலமான செயல் திட்டம் ஒன்றை வகுத்து தடுப்பு மருந்து குறித்த மக்களின் தயக்கத்தைப் போக்க வேண்டும்.
தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளைத் தவிர்த்து மேலும் ஏழு தடுப்பு மருந்துகள் பல்வேறு வளர்ச்சிப் படிநிலைகளில் உள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. அடுத்த மாதத்திலிருந்து, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது. இதற்காக மத்திய அரசின் பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி, 50 கோடி மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்க முடியும் என நிதி அமைச்சகத்தின் செயலர் கூறுகிறார். மேலும் இந்தியா 17 நாடுகளுக்கு 56 லட்சம் தடுப்புமருந்து டோஸ்களை ஏற்றுமதி செய்துவருகிறது. தடுப்புமருந்து தயாரிப்பில் போதுமான அளவு உற்பத்திகளை இந்தியா சுயமாக சாதித்திருப்பது நமது அதிர்ஷ்டமே.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 138 கோடி பேருக்கும் எடுத்த எடுப்பில் ஒரே முயற்சியில் தடுப்புமருந்து கொடுப்பது சாத்தியமில்லை. அதனால்தான் தடுப்புமருந்து வழங்கும் திட்டத்தை பலகட்ட படிநிலைகளில் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது அரசாங்கம்.
ஆரம்பக்கட்ட பயனாளிகள் கொண்ட தயக்கத்தின் விளைவாக, தடுப்புமருந்து இருப்புகளாக உற்பத்தியாளர்களிடமே குவிந்துக் கிடக்கின்றன. அதனால், தடுப்புமருந்தின் தேவை உள்ள கோடிக்கணக்கானவர்கள் தாங்கள் போட்டுக் கொள்ள விழையும் ஊசிமருந்தைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். அரசு முழுவீச்சில் தடுப்புமருந்து உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனைகளையும் இந்தச் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்புமருந்து கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
அரசு தடுப்புமருந்துத் திட்டத்தில் கிட்டத்தட்ட 85 விழுக்காடு, 12 மாநிலங்களில் மட்டுமே மையம் கொண்டிருக்கிறது. பிற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு குறித்தும் ஆராய வேண்டும். தடுப்புமருந்து ரகசியமாய் கருப்பு சந்தைக்கு விற்பனை செய்வோரைத் தடுப்பதற்காக கடுமையான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
ஜிபிஎஸ் அமைப்பின் மூலம் தடுப்புமருந்து வாகனங்கள் கண்காணிக்கப் படவேண்டும். தடுப்புமருந்து திட்டத்தை வெற்றிகரமாய்ச் செயல்படுத்த, மத்தியஅரசும், மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். கரோனா தடுப்புமருந்து பற்றிய மக்களின் தயக்கங்களைப் போக்கிட முழுமையான விளம்பரங்களை வடிவமைக்க வேண்டும். இதன் மூலம் தடுப்பு மருந்தை மக்களிடையே பிரபலமாக்க வேண்டும்.
மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தாலே இந்த அகில உலகத் தொற்றுப் பரவலுக்கு எதிரான போரில் நிச்சயம் நாடு ஜெயிக்கும். இதனால் நோயும் காணாமல் போய்விடும்.