சென்னை: தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திராவிட இயக்கங்கள்தான், 40 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டனர் எனவும், தமிழ்தேசிய சிந்தனையுடன் இயங்கும் நாம் தமிழர் கட்சி என்றைக்கு ஆட்சி பொறுப்பிற்கு வருகிறதோ அன்றுதான் தமிழ்நாட்டிற்கு விமோச்சனம் என மேடைதோறும் பேசி வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமானின் தந்தை அண்மையில் மறைந்துவிட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக சீமானைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். 'இரங்கல் குறிப்போடு நிறுத்தி இருக்கலாம், ஆனால், தொலைபேசியில் பேசியதில் நெகிழ்ந்து போனேன்' என சீமான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து கரோனா நிவாரண நிதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கரோனா நடவடிக்கைகளை சீமான் பாராட்டியிருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து 55 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து எந்தவிதமான திமுக ஆட்சி மீதான விமர்சனமோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர்.
திமுக மீது காட்டம்
சீமான் அண்மையில் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் 'திமுகதான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து, எல்லா பிரச்னைகளையும் 100 நாட்களில் தீர்த்து விடுவோம் என வானளவில் அளந்தனர்.
50 நாட்களை கடந்துவிட்டோம்; பிரச்னைகளை தீர்ப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை, மக்களின் பிரச்னைகளை கடிதங்களாய் பெற்ற பெட்டி எங்கே? சாவி தொலைத்துவிட்டதா' என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். சீமானின் ட்விட்டர் பதிவிற்கு திமுக ஆதரவு பதிவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர்.
தமிழ் தேசிய சிந்தனையோடு நம் தமிழர் இயங்கிவரும் நிலையில், திமுகவை பாராட்டி பேசி வருவது தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவாளர்கள், சீமான் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக கருதியுள்ளனர்.
தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசைப் பாராட்டி வருவது கட்சிக்கு நல்லதல்ல, இதனால் கட்சி தனது வாக்குவங்கியை இழக்கக்கூடும் என்ற கருத்து சீமான் காதுகளுக்கு சென்றுள்ளது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொண்டு 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, அடுத்த 2019 மக்களவைத் தேர்தலில் 3.35 விழுக்காடு வாக்குகளை பெற்றது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை 7 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியது. திராவிட கட்சிகளை எதிர்த்து நின்றால் மட்டுமே வாக்கு விழுக்காட்டை உயர்த்த முடியும் என்று சீமான் கருதுவதாகத் தெரிகிறது.
விஜயலட்சுமி புகார்
அதேபோல் சீமான் மீது விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ள்ளனர். எனவே திமுக தனக்கு எதிராக இந்த அஸ்திரத்தை கையில் எடுக்கும் என சீமான் தரப்பு நினைக்கிறது.
வருங்காலங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கவும் சீமான் தயங்க மாட்டார் என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்தை முன் வைக்கின்றனர்.
சீமானின் விமர்சனம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ராமஜெயம், "எதிர்க்கட்சி என்ற முறையில் அரசியல் இயக்கம் விமர்சனங்களை முன்வைப்பது வழக்கம். தற்போதைய விமர்சனம் அரசியல் ரீதியானதுதான்" என்றார்.
இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் கார்த்திகேயன், "நாம் தமிழர் கட்சி, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதபோது கேள்வி கேட்போம். சீமான் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறார்" என்றார்.
சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியல் இருக்கும் எனவும், அவர் காலமறிந்து அரசியல் செய்வதில் கை தேர்ந்தவர் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'கரோனா உயிரிழப்பு; வெள்ளை அறிக்கை வெளியிடுக' - சீமான்