சென்னை: சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையம் திறப்பு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம், ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டு விழா, பல்லாவரம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ஆம் தேதி கலந்துக்கொண்டார்.
முன்னதாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடபாடி பழனிசாமி ,மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்பி.கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறான் மற்றும் டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் சேவை தொடக்கம், ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவை தொடர்ந்து இறுதியாக பல்லாவரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு அடிங்க நாட்டும் விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் மைசூரு புறப்பட்டார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து ஆன்லைன் ரம்மி விவகாரம் மற்றும் தமிழகத்திற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமரை தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணமாக இருவரையும் சந்தித்து பிரதமர் பேச முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் பிரதமரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக்கொண்டுவிட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மைசூரு சென்ற பிரதமர் மோடி ஏப்ரல் 9(இன்று) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட பிறகு ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு சென்று அங்கு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன் - பெள்ளி தம்பதி உள்ளிட்ட யானை பராமரிப்பாளர்களை சந்தித்து பேசுவதோடு யானைகளுக்கு உணவளிக்க உள்ளார்.
இதையும் படிங்க: 'வந்தே பாரத்' ரயில் கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவும் - வானதி சீனிவாசன் மகிழ்ச்சி