சென்னை: நடிகை நயன்தாராவை சுற்றி எப்போதும் வதந்திகள் பரவி வருவது வாடிக்கையாகி விட்டது. தற்போது புதுவரவாக ஒரு விஷயம் சுற்றி வருகிறது. அதாவது சென்னையில் உள்ள அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கிவிட்டார் என்பதுதான் அது. அந்த திரையரங்கை வாங்கியுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கட்ட முடிவு செய்திருப்பதாக பரவிய தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் அடையாளமாக இருந்த அகஸ்தியா திரையரங்கு கரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு மூடப்பட்டு விட்டது. 50 ஆண்டுகாலமாக வட சென்னை பகுதியில் செயல்பட்டு வந்தது இந்த திரையரங்கம். கரோனா சமயத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய முடியாமல் மூடப்பட்டது. இந்த திரையரங்கைத் தான், நடிகை நயன்தாரா வாங்கி மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து திரையரங்கின் உரிமையாளர் தரப்பு கூறும்போது, “ஏற்கனவே மெட்ரோ பணிகளுக்காக திரையரங்கின் ஒரு பகுதியை அரசு கைப்பற்றி உள்ளது. மேலும் அகஸ்தியா திரையரங்கு தனிநபர் சொத்து கிடையாது என்றும், அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்றும் கூறிய அவர் அறக்கட்டளை இடம் என்பதால் இதனை விற்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் இணைந்த ராஜா ராணி கூட்டணி - நயன்தாரா 75 அப்டேட்!
மேலும் ஏற்கனவே மெட்ரோ பணிக்கு முன்பகுதி கொடுத்துவிட்டதால் மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட உள்ளனர். இதற்கான ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டு விட்டதாக குறிப்பிட்டு உள்ளனர். இதனால் நடிகை நயன்தாரா இந்த இடத்தை வாங்கி விட்டதாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை. இதற்கான பேச்சுவார்த்தை கூட எதுவும் நடைபெறவில்லை என்றனர்.
யார் பரப்பிவிட்ட செய்தி இது என்றும் தெரியவில்லை. ஏற்கனவே நயன்தாராவை சுற்றி பல சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் இந்த திரையரங்கு செய்தியும் பொய் என தெரியவந்து உள்ளது. இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்குவதாக இருந்து நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் அதிலிருந்து விலக்கப்பட்டார். தற்போது அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசை அமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதையும் படிங்க: காதல் படங்களில் அதிகம் நடித்ததில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!