சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2021-22 ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான இவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 10 ஆயிரத்து 610 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. இதற்காக மூன்றாயிரத்து 73 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
நடப்பு கல்வி ஆண்டில் 3ஆயிரத்து 73 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் ஆயிரத்து 659 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 2020 கடந்த கல்வியாண்டில் 3770 பேர் விண்ணப்பித்த நிலையில் 2106 பேர் இந்தப் படிப்புகளில் சேர்ந்து இருந்தனர். 7294 காலி இடங்கள் இருந்தன.
மேலும், கரோனோ கால கட்டத்திற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் பத்தாயிரம் இடங்களில் 3 ஆயிரத்து 852 பேர் சேர்ந்தனர். 6 ஆயிரத்து 148 காலியிடங்கள் மட்டுமே இருந்தன.
இதனிடையே, இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறும்போது, "இளங்கலை பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குத் தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன.
முதுகலை பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பணிக்குச் செல்ல விரும்புவார்கள் மட்டுமே முதுநிலை படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். தற்பொழுது பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால் ஆசிரியர் பணியும் கிடைக்காமல் உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை பொறியியல் மட்டும் இல்லாமல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பிஎஸ்சி கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பினை முடிக்கின்றனர். இதன் காரணமாக முதுகலை படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
மேலும், பொறியியல் படிப்பில் 2 லட்சம் பேர் சேர்ந்த போது 5 சதவீதம் மாணவர்கள் என்ற அளவில் 10 ஆயிரம் பேர் சேர்ந்தனர். ஆனால், தற்பொழுது ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் சேர்கின்றனர். இதன் காரணமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் - காவல் துறையினருக்கு எடப்பாடி எச்சரிக்கை!