நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கருத்து குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த செப்.12ஆம் தேதி அன்று ஒரே நாளில் மூன்று மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதற்றம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழ் நாடே கவலைகொண்டது. அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதே யதார்த்தமான உண்மை.
இந்நிலையில், அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அப்படி என்ன சூர்யா தவறாகப் பேசி விட்டார் என்ற கேள்வி, பரவலாக எதிரொலிக்கிறது.
ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யாமீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகவே கருதப்படும். அவரின் கருத்தை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். எனவே சூர்யா மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.