சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விதிகள், பெண்களுக்கு 50 விழுக்காட்டிற்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்கிறது.
சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மொத்த இடங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் ஜனவரி 17ஆம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பெண்கள் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டியது
இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 விழுக்காட்டுக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனுவில், எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், எந்தப் புள்ளிவிவர ஆதாரங்களும் இல்லாமல் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதித்தால், அது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தையே பாதிக்கச் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு?
இந்த வார்டு ஒதுக்கீடு உத்தரவை ரத்துசெய்து, வார்டுகளில் உள்ள பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலா அல்லது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து சென்னை மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
இதையும் படிங்க:உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் கரோனா தடுப்பூசி - குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி