சென்னை: தேனி மாவட்டத்தில் 'அரி கொம்பன்' (ari komban) காட்டு யானையின் நடமாட்டம் - 'சுயம்பு' , 'முத்து' மற்றும் 'உதயன்' ஆகிய 3 கும்கி யானைகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தேனி மாவட்டத்தில் 'அரி கொம்பன்' (ari komban) காட்டு யானையின் நடமாட்டம் குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்றம், ஆணையின்படி, 35 வயது ஆண் யானையான 'அரி கொம்பன்' (ari komban) ஐ பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கேரள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து இந்த 'அரி கொம்பன்' (ari komban) யானையை கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் கேரள - தமிழக எல்லையில் விடுவித்தனர்.
இந்த நிலையில் தேனி, கம்பம் நகர் பகுதிக்குள் மே 27 ஆம் தேதி காலை திடீரென புகுந்த 'அரி கொம்பன்' (ari komban) வாகனங்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தியும் உலா வந்தது. எனவே, கம்பம் பகுதியில் அரி கொம்பன் (ari komban) நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச்சூழ்நிலையில் கம்பம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அரி கொம்பன் (ari komban) தஞ்சம் அடைந்திருந்தது. பிறகு அங்கிருந்து கூடலூர் சாலை பகுதிக்கு சென்றது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர் யானையைப் பின் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 'அரி கொம்பன்' (ari komban) காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருகிறது. கள இயக்குநர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் (Srivilliputhur - Meghamalai Tiger Reserve) அவர்களின் தலைமையில் மேகமலை கோட்டத்தின் துணை இயக்குநர், தேனி மாவட்ட வன அலுவலர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்ட துணை இயக்குனர், மேகமலை கோட்டத்தின் உதவி வனப் பாதுகாவலர் மற்றும் துணை வனப் பாதுகாவலர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
மதுரை வனப் பாதுகாப்புப் படையின் (Madurai Forest Guard Force) மூலம் வனப்பகுதிக்குள் யானைகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தின் (Srivilliputhur - Meghamalai Tiger Reserve) உள்ளூர் யானை கண்காணிப்பாளர்கள் உட்பட முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை (Mudumalai and Anaimalai Tiger Reserve) சேர்ந்த 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள் ரேடியோ காலர் (Radio collar) பொருத்தப்பட்ட 'அரி கொம்பன்' (ari komban) யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
டாப்சிலிப் யானைகள் முகாமில் (Tapsilip Elephant Camp) இருந்து 'சுயம்பு' மற்றும் 'முத்து' வும் (Kumki Elephants Swayambu and Muthu) மற்றும் முதுமலை யானைகள் முகாமில் (Mudumalai Elephant Camp) இருந்து 'உதயன்' (Kumki Elephant Udayan) ஆகிய 3 கும்கி யானைகள் சம்பவ இடத்துக்கு வந்து மேற்படி நடவடிக்கைகளுக்கு துணை நிற்கின்றன. யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இரண்டு பிரிவுகளாக செயல்பட கள இயக்குநர், ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் (Srivilliputhur - Meghamalai Tiger Reserve) அவர்கள் நான்கு முக்கிய குழுக்களை அமைத்துள்ளார்.
தளவாடங்கள், கும்கிகளைக் கையாளுதல், தரவுகளைத் திரட்டுதல் மற்றும் இதர தேவைகளுக்குத் தனிக் குழுக்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. மின்சாரம் தாக்காமல் இருக்க, யானைகள் பாதுகாப்பாக செல்வதை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (Tamil Nadu Electricity Board) பிரத்யேக குழு கண்காணித்து வருகிறது. ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக கம்பம் வன சரக அலுவலக வளாகத்தில் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 160 வனத்துறை அலுவலர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் (Anaimalai Tiger Reserve), முதுமலை புலிகள் காப்பகம் (Mudumalai Tiger Reserve), ஓசூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 31 வனத்துறையினரும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கம்பம் நகராட்சி (Kampam Municipality) பகுதியில் 144 தடை உத்தரவு மூலம் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் (Theni District Collector) நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். யானையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: Arikomban Update: தேனியில் முதல் உயிர் பலி வாங்கிய அரி கொம்பன் யானை!