சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அத்துறை அமைச்சர் வி. சரோஜா அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை பின்வருமாறு:
- மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் பகிர்ந்தளிப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மண்டலம் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்
- மருத்துவமனை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவற்றிலுள்ள குணமடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சமுதாயத்தில் ஒன்றிணைக்க ஏதுவாக 700 பயனாளிகள் பயன்பெறும் வகையில் தலா 40.10 லட்சம் ரூபாய் செலவில் மதுரை, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் 2.10 கோடி ரூபாய் செலவில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம் இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்
- பார்வைத் திறன் குறையுடைய எளிதில் பிரெய்லி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவிலுள்ள புத்தகங்களை பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி தலா 35 ஆயிரம் ரூபாய் செலவில் 200 பயனாளிகளுக்கு 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்
- பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு பிரெய்லி முறையில் தரமான கல்வி பெறுவதற்கு ஒளி மற்றும் பிரெய்லி எழுத்து வடிவ தொடு உணர்வுடன் அறிந்துகொள்ளும் நவீன வசதி கொண்ட திறன் வகுப்பறைகள் 12 பள்ளிகளில் 1.8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
- மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு தற்போது வழங்கப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களுக்கு பதிலாக பூத்தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய தரம் உயர்த்தப்பட்ட தையல் இயந்திரங்கள் 3 ஆயிரம் பயணிகள் பயன்பெறும் வகையில் 3.30 கோடி ரூபாயில் வழங்கப்படும்
- சட்டம் பயின்ற பட்டதாரி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு சட்டப் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளவும் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்ளவும் வழங்கப்படும் உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
- மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் தனித்துவம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் மாவட்டந்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் இதற்காக 1.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- விழுப்புரம், விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்படும்
- அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் 200 நபர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தனிநபர் உதவிக்கான பயிற்சி வழங்கப்படும் . பயிற்சிபெற்ற காப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவை குறித்த விவரங்கள் பராமரிக்கப்படும் . மேலும் கிராமப்புற மக்களுக்கான சேவையை அறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் தனிநபர் உதவிக்காக நிதி ஒதுக்கப்படும்
- மாற்றுத் திறனாளிகளுக்கான தடையில்லா உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான தணிக்கை பணிகள் அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மொத்தம் 790 கட்டடங்கள் 4.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
- முதல்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்படும் 200 சுற்றுலாத்தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தடையில்லா உள்கட்டமைப்பிற்கான தணிக்கை பணிகள் 1.20 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'புழல் சிறையில் வானொலி மையம் அமைக்கப்படும்' - அமைச்சர் சி.வி. சண்முகம்