தமிழ்நாட்டில் ஆரணி, சேலம், கோவை, திருப்புவனம், சின்னாளம்பட்டி எனப் பல்வேறு இடங்களில் பிரதானத் தொழிலாக கைத்தறித்தொழில் உள்ளது. ஆனால், பட்டு என்றால் அது காஞ்சிபுரம்தான் என்ற அளவுக்கு மக்களிடையே அதன் புகழ் பரவியுள்ளது. இந்தப் பட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. நுட்பமான கைவேலைப்பாடுகள், தங்கமும், வெள்ளியும் கலந்த மிடுக்கான சரிகை, எடுப்பான சுங்கு முடி என, 600 கிராமிற்கு அதிகமான எடையிலேயே, இப்புடவைகளை நெய்ய முடியும்.
சரிகையே இல்லாத சேலைகூட 5 ஆயிரம் ரூபாய்க்குக் கீழே விற்பனைக்கு வராது. காஞ்சிப் பட்டின் விலையில் நெசவாளர்களின் உழைப்பை விட தங்கம், வெள்ளியின் விலைதான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி, பல நுணுக்கங்கள் மிகுந்த காஞ்சிப் பட்டு, மத்திய அரசின் பட்டு நூல் இறக்குமதி மீதான வரி விதிப்பு, ஜிஎஸ்டி, போலிகளின் வரவு, விசைத்தறிகளின் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல தனது கம்பீரத்தை இழந்து வரும் நிலையில், கரோனா பொதுஊரடங்கு இவர்கள் மீது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நெசவாளர்களின் நிலை!
இந்தியாவில் சுமார் 31 லட்சத்து 45 ஆயிரம் பேர் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 87 விழுக்காட்டினர் கிராமப்புறங்களிலும், மீதமுள்ள 13 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களிலும் கைத்தறித்தொழில் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான நெசவாளர்கள் உள்ளனர்.
இதில் காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் நெசவுத்தொழிலை நம்பியுள்ளனர். இதில் சோகம் என்னவெனில் மெனக்கெடல்களுடன் தாங்கள் உருவாக்கும் இச்சேலைகளை தங்கள் வீட்டு விழாக்களுக்கு உடுத்திக் கொள்ளுமளவுக்கு இவர்களிடம் பொருளாதார வசதியில்லை என்பதுதான் நிதர்சனம்.
குறிப்பாக, பாதிக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இன்றளவும் வாடகை வீட்டில் வசிக்கும் நிலையில் தான் உள்ளனர். ஊரடங்கிற்கு முன்பு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியமாகக் கிடைத்தது. இதனால், வாடகை, உணவு போன்றவற்றை ஓரளவு சமாளித்த இவர்களால் தற்போது 2 ஆயிரம் ரூபாய்கூட வருமானம் இல்லாத நிலையினைக் கையாள முடியவில்லை என்பது வேதனை.
ஆறு மாத வாடகையை மொத்தமாகக் கொடுக்கச் சொல்லி, வீட்டு உரிமையாளர் நிர்பந்தப்படுத்துவதாகக் கூறும் நெசவாளர் லதா, அதனால் பல ஆண்டுகளாக செய்து வந்த கைத்தறித் தொழிலை விட்டுவிட்டு தற்போது பஜ்ஜி விற்கத் தொடங்கியுள்ளதாக இயலாமையின் வலியுடன் தெரிவிக்கிறார். ஒரு புடவையை நெய்து கொடுத்தால் 4 ஆயிரத்து 500 ரூபாய் தான் கூலி. இதில், ஆயிரம் ரூபாய் பட்டு நெய்யும் மூலப் பொருள்களை வாங்கவே செலவிட வேண்டியுள்ளது.
ஒரு மாதத்திற்கு இருமுறை மட்டுமே புடவைகள் நெய்யக் கொடுக்கப்படுகின்றன. இந்த இக்கட்டான சூழலில் ஒருவேளை சாப்பாடு என்பதே பெரிய விஷயமாகிவிட்டதாக சரளா என்ற நெசவாளர் வேதனையுடன் தெரிவிக்கிறார். மேலும், வாடகை வீட்டில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச மின்சாரத்தைக்கூட, எங்களால் பெறமுடிவதில்லை என்று கூறும் சரளா, நலவாரியத்திலும் நாங்கள் உறுப்பினராக இல்லாததால், அரசின் நிவாரண நிதியைப் பெற முடியவில்லை என்றும், ரேஷன் கடை அரிசியில் தான் பிழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் சுமாராக 22 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. தற்போது 4 சங்கங்கள் மட்டுமே நன்றாக செயல்பட்டு வருகின்றன. மற்றவை, மூடும் நிலையை அடைந்ததோடு, உற்பத்தி செய்த சேலைகளையும் விற்கமுடியாத சூழல் நிலவுகிறது. ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 கோடி ரூபாய் மதிப்பில்கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என நெசவாளர் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
கரோனா பரவலுக்கு முன்னர் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்து பட்டு எடுத்துச் செல்வார்கள் என்றுகூறும் நெசவாளர் கூட்டமைப்புத் தலைவர் பிரகாஷ், தற்போது அவர்கள் வராததால் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். ஏற்கெனவே, உற்பத்தி செய்தவற்றை விற்க முடியாததால் புதிய ஆர்டர்கள் வருவதில்லை என்றும்; இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க அரசு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்ததே தவிர வேறு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.
வறுமை, போதிய வேலையின்மை ஆகிய காரணங்களுக்காக இத்தொழிலை கைவிட்டு சிலர் தொழிற்சாலை ஊழியர்களாகவும், வாயிற்காவலர்களாகவும், காய்கறி விற்கவும் சென்றுவிட்டனர். நலிவடையும் இத்தொழிலை மீட்க உற்பத்தி செய்த சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்தால் ஓரளவு அவர்களது கஷ்டம் குறைய வாய்ப்புள்ளது என நெசவாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முன்னதாக, கடந்த 1989, 1995ஆம் ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்கள் கடனில் சிக்கியதால் நெசவாளர்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது நெசவாளர்களிடம் தேங்கியிருந்த சேலைகளை அரசே கொள்முதல் செய்து கொண்டது. அந்த நடவடிக்கையால் நெசவுத்தொழில் புத்துயிர் பெற்றது. இதைப் போல இம்முறையும் செய்யும் பட்சத்தில் நெசவாளர்களின் பிரச்னைகள் ஓரளவு குறைய வாய்ப்புள்ளன.
இனியும் காலம் தாமதிக்காமல் இந்தத் தொழிலாளர்களுக்கு அரசு உதவினால் மட்டுமே, உள்ளூர் தொழிலை ஊக்குவிக்கும் தற்சார்பு இந்தியாவில் துளியேனும் நிறைவேறும் வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிங்க: நெசவாளர்களின் நெருக்கடியை புரிந்து கொண்டு உதவுமா தமிழ்நாடு அரசு?