தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்தர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நேற்று அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதன் ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுப்பெறக்கூடும். தற்போதைய நிலவரப்படி இது வட மேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மண்டபம் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக் கடல், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நாளை மற்றும் நவம்பர் 7ஆம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பகல் நேரம் வெப்ப நிலைக்கும், இரவு நேர வெப்பநிலைக்கும் உள்ள வேறுபாடு காரணமாகவும், மணல் மற்றும் காற்று ஈரப்பதம் ஆவதால் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வெப்பம் அதிகரித்தால் இது சரியாகிவிடும் என்றார்.