தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்துவருகிறது. 2018ஆம் ஆண்டு பருவமழை சரிவர பெய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டது. கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு இயல்பை விட ஐந்து டிகிரி முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிப்பதனால், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியார், வைகை அணைக்கட்டு பகுதியில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை நிலவும் என்று தெரிவித்துள்ளது.