சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று (டிசம்பர் 28) சென்னை, சைதாப்பேட்டை, நெருப்புமேடு பகுதியில், மாண்டஸ் புயலின் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த லட்சுமியின் கணவர் கேசவேலுவிடம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் ரொக்கத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், மாம்பலம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். இதனைத்தொடரந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த பயணிக்கு கரோனா:
அதில், “ சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற ஐந்து நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பன்னாட்டு விமான நிலையங்களுக்கு நேரிடையாக வந்தாலும் அல்லது வேறு நாடுகளுக்கு சென்று வந்தாலும், அவர்களுக்கு 100 சதவீதம் RTPCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்டிபடி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் நேற்று (டிசம்பர் 27) சீனாவில் இருந்து 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் சீனாவிலிருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்திருக்கிறார். அவர்களை கண்காணித்து RTPCR பரிசோதனை செய்யப்பட்டதில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களை கண்காணிக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களை அறிவுறுத்தியிருக்கிறோம். மேலும் இவர்களை காரில் அழைத்துச் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கும் RTPCR பரிசோதனை செய்யப்படும். ஏனெனில் அவர் தொற்றுக்குள்ளானவர்களை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவருக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றதா என்பதை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.
இவர்களுடன் பயணித்த மற்றொரு பெண் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று வந்து இருக்கிறது. இந்நிலையில் அவர்களுடைய மாதிரிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் அந்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அதற்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்.
அந்த வைரஸ் BA5 அல்லது BA5-விலிந்து உருமாறியிருக்கும் BF7 வைரஸா என்று 4 அல்லது 5 நாட்களில் தெரியவரும். தொற்று பாதிப்பிற்கு உள்ளான அந்த இருவரும் Mild என்கின்ற மிதமான பாதிப்புடன் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய அருகில் உள்ள யாரும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
பன்னாட்டு விமான நிலையங்களில் RTPCR பரிசோதனைகள்:
தொடர்ந்து பேசுகையில், “தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற நான்கு விமான நிலையங்களும் பன்னாட்டு விமான சேவையினை வழங்கி வருகிறது. இந்த நான்கு விமான நிலையங்களிலும் அதற்கானப் பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
நான்கு விமானநிலையங்களிலும் ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அனைவரையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 100 சதவீதம் RTPCR பரிசோதனை செய்யப்படும்” என்றார்.
கரோனா விதிமுறைகள்:
பின்னர், கரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பது தொடர்பான கேள்விக்கு, “கரோனா விதிமுறை என்பது 100 சதவீதம் அமலில் உள்ளது. மக்கள் அதிகம் கூடும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள், சமுதாய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், கோயில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
BF7 உருமாற்றமடைந்த கரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் வகையை சார்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த BF.7 வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாமும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்” எனப் பதிலளித்தார்.
கரோனா தடுப்பூசி: இதனைத்தொடர்ந்து தடுப்பூசி குறித்த கேள்விக்கு, “தடுப்பூசி செலுத்துவது அதிகரிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2.6 லட்சம் அளவில் கோவேக்சின் தடுப்பூசிகளும், 40,000 அளவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன.
முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ஏற்கனவே 60 வயதைக் கடந்தவர்கள், இணைநோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர்களில் 60 சதவீதத்திற்கும் மேலாக செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டும் மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஒன்றிய அரசிடம் இந்த மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனைகளில் செலுத்த அனுமதி வேண்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முழுக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு எடுக்கும் முடிவினை பொறுத்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும்” எனப் பதிலளித்தார்.
மேலும் அவர், ஊரடங்கு விதிப்பது குறித்து ஒன்றிய அரசு எடுக்கும் முடிவினை பொறுத்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் மீது பிரதமருக்கு சிறப்பு கவனம்: அண்ணாமலை