தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16ஆவது பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (மே.11) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க சார்பில் ஐவர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுள்ளோம். பா.ம.க 5 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதை குறைவாகவே கருதுகிறோம். இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்துள்ளது. அவருக்கு பா.ம.க சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பா.ம.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் தொகுதி வளர்ச்சிக்கும், தமிழ்நாடு வளர்ச்சிக்கும் பொறுப்புடன் செயல்படுவோம். கடந்த காலங்களில் செயல்பட்டது போன்று தமிழ்நாட்டின் தேவை குறித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம். தமிழ்நாட்டின் புதிய அரசு வெளியிட்டுள்ள 5 அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. மக்களுக்கு நல்லது நடந்தால், அதனை பாமக வரவேற்கும்.
10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் எந்த சமூகத்தினருக்கும், எந்த பாதிப்பும் இல்லை. இந்த இட ஒதுக்கீட்டை இன்னும் மேம்படுத்த வேண்டும். எல்லா சமுதாய மக்களுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் பா.ம.கவின் கோரிக்கை. பிற்படுத்தப்பட்டோர் மக்கள் இட ஒதுக்கீட்டில் யாரும் கை வைக்கவில்லை.
அனைத்து தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு பெறுவதற்கு தேவையான நடவடிக்கையை அரசிடம் கூறி வலியுறுத்துவோம். சட்டப்பேரவைத் தேர்தலில் இட ஒதுக்கீட்டால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வருங்காலங்களில் இன்னும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமல்ல, நிரந்தரமான சட்டம்தான்” என்றார்.
இதையும் படிங்க : இந்துசமய அறநிலையத்துறை வெளிப்படையாக இருக்கும் - அமைச்சர் சேகர்பாபு