மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பல்வேறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பாஜக தொடர்ந்து எங்கள் மீது பொய் வழக்குகளை புனைந்து வருகிறது. அது அனைத்தையும் நீதிமன்றம் சென்று எதிர்கொண்டு வருகிறோம். அது பொய் வழக்குகள் என்பதால் அந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. அதனால் அவர்கள் எங்கள் மீது அவதூறுகளை பரப்புகின்றனர். நேற்று தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நான் பேசிய வீடியோவை திரித்து அவதூறாக பதிவிட்டுள்ளனர்.
சிறை செல்வதற்கு அச்சப்பட்டு நிற்க நாங்கள் எச்.ராஜா கிடையாது. ஆனால் அவதூறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடுக்கவுள்ளோம். இதையெல்லாம் பாஜகவினர் எப்போது நிறுத்தப்போகிறார்கள் என தெரியவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆளுநரால் இதுவரை ஏழு தமிழர் விடுவிக்கப்படவில்லை. இதே போன்ற நிலைதான் தற்போது தமிழிசை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள மாநிலத்திலும் நடக்கும். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பெரிதாக எந்த காரணமும் இல்லை. அவர்களால் தமிழ்நாட்டில் எந்த நல்லதும் நடந்ததில்லை.
ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மிக மோசமான நிலையை நோக்கி செல்வதற்கு அரசின் வரி விதிப்புதான் காரணம். இதிலிருக்கும் நிதி நிறுவனங்கள் மிக மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சென்னையில் அதிகமாக உருவாக்கப்படுவதால் தமிழ்நாட்டிற்கு மிக மோசமான பாதிப்பு இருக்கின்றது.
சென்னையின் பொருளாதாரம் 58 பில்லியன் கோடி ரூபாய். அதில் பெரும் பகுதி ஆட்டோமொபைல் நிறுவனங்களிலிருந்து வருகிறது. எனவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் சென்னையின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும்” என்றார்.