மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்தோஷ் பாபுவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருவான்மியூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், "தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு பிரச்னையையும் குறித்து வைத்துள்ளோம். எங்கள் எம்எல்ஏக்களின் வரவு செலவு கணக்குகளை மக்களும் சரி பார்க்கலாம். ஒருவரது பிரச்னையாக இருந்தாலும், ஓராயிரம் பேரின் பிரச்னையாக இருந்தாலும் அரசை எளிதில் அணுகலாம்.
வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு பேட்ட பிஸ்தாவாக இருந்து வந்தவர் அல்ல. படித்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தில் உள்ள அனைவரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவுத் தொழிலாளர்கள். இப்போது சுத்தம் செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறையினர் எங்களை ஏசுவர். நான் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டேன். இப்போது மக்களுக்காக கூட்டத்தில் வந்து நிற்கிறேன். என் தாடிக்குள்ளும் ஒரு குழந்தை உள்ளது. தாய்மார்களுக்கு நான் குழந்தையாகத் தெரிகிறேன். சிறுவர்களுக்கு நான் இந்தியன் தாத்தாகவாக தெரிகிறேன்.
ஹெலிகாப்டரில் ஆடம்பரத்துக்காக செல்லவில்லை, அவசியத்திற்காக செல்கிறேன். காந்தி கூட ஒரு ரயிலை வைத்துக்கொண்டு அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தார். அரசியலில் பெருந்ததலைவர்கள் நமக்கு பின்னால் யார் என்பதை யோசிப்பார்கள்.
நாற்காலியை பிடித்துக்கொண்டு நகரமாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம், மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும். மக்களின் ஏழ்மையை மாற்ற முடியாது என்பவர்கள் டுபாக்கூர்கள். ஏழ்மையை மாற்ற முடியும்" என்றார்.