சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வந்தாலும், மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொடவுள்ளது.
மக்கள் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவருகின்றனர். பலரும் கரோனா வைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். தனிநபர் இடைவெளிகளைக் கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பலரும் பொதுவெளியில் பயணிக்கின்றனர். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, தற்போது பண்டிகை காலம் நெருங்கவுள்ளதாலும், பருவமழை பெய்துவருவதாலும் மக்கள் தொற்று பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வது அவசியமாகிறது.
இந்நிலையில், மக்கள் அனைவரும் தொற்று பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.... மக்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.... ஆனால், கடைபிடிக்க மறுக்கிறார்கள். அது என்ன? கொரோனாவிலிருந்து தப்ப முகக்கவசம் அணிவது தான். முகக்கவசம் அணியுங்கள்.... கொரோனா ஆபத்தை தவிருங்கள்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.