சென்னை: சதுப்பு நிலங்கள் சிறிய பல்லுயிர்களுக்கு மட்டும் வாழ்வளிக்கவில்லை, மனிதனுக்கும் பெருமளவில் மறைமுகமாக பயனளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தென்சென்னை மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வாக அமையவிருக்கிறது.
மழைநீரில் மிதக்கும் தென்சென்னை: ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழக்கூடிய நிலை இன்றைக்கும் இருந்து வருகிறது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க, அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தென்சென்னை பகுதியில் மட்டும் எல்லா வசதிகளும் இருந்தாலும் கூட மழைக்காலத்தில் மட்டும் மழை நீரில் தத்தளிக்கும் அவலம் இன்றைக்கும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன் பெருங்குடி மண்டலம் உருவாக்கபட்டது. இந்த மண்டலத்திற்குள் மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன.
மழைநீர் செல்ல வழியில்லை: மழைக் காலங்களில் இந்த பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும். குறிப்பாக, மழைக் காலங்களில் தென்சென்னையிலிருந்து வெளியேறக்கூடிய மழைநீர், கால்வாய் வழியாக வெளியேறி அருகில் இருக்கக்கூடிய ஏரிகளுக்குச் செல்லும்.
அங்கிருந்து வடிகால் வழியாக அருகில் இருக்கும் சதுப்புநிலத்தை அடையும். ஆனால், இந்த சதுப்பு நிலத்தில் சரியான வழித்தடம் இல்லாததால், வடிகால் வழியாக வரக்கூடிய மழைநீர் விஜய நகர், ஆதம்பாக்கம், கல்லுக்குட்டை, ராம் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து கொள்கிறது. மேலும், மடிப்பாக்கம் பிரதான சாலையை வெள்ள நீர் சூழ்வதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும் சூழல் எல்லா வருடமும் நிகழ்கிறது.
படகு வாயிலாக மீட்கப்படும் சூழல்: இது போன்ற சூழல் ஏற்படுவதால், பேரிடர் காலங்களில் தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், கல்லுக்குட்டை, நாராயணபுரம் போன்ற பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி, அங்கு வசிக்கும் மக்களை படகு வாயிலாக மீட்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
மழைநீரை வெளியேற்றுவதற்கான வழித்தட பணி: மேலும், இது போன்ற சூழல் எல்லா வருடமும் நிலவுவதால், இதற்கு நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், சதுப்பு நிலம் வழியாக மழைநீரை வெளியேற்றுவதற்கான வழித்தடப் பணிகளை சென்னை மாநகராட்சி தற்போது மேற்கொண்டுள்ளது.
கடந்த 200 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வழித்தடப் பணிகள் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிவு பெற்று விடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சதுப்பு நிலத்தில் நீர்வழித்தடம் அமைப்பதால், தென்சென்னையில் பல பகுதிகள் பாதுகாக்கப்படும் எனவும், அதிகளவு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல், நேரடியாக கடலில் கலக்கும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகளால் அழியும் நிலையில் சதுப்பு நிலம்: இவைகளெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பல்லுயிரிகளுக்கு வாழ்விடமாக இருக்கக்கூடிய சதுப்பு நிலங்களை இப்படி மாற்றியமைப்பது இயற்கைக்கு புறம்பான செயல் என இயற்கை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
5,000 ஹெக்டர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் கட்டடங்களின் ஆக்கிரமிப்புகளால், தற்போது 500 ஹெக்டர் நிலமாக சுருங்கிவிட்டது எனவும், பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் இருந்து குப்பைக் கழிவுகள் இந்த சதுப்பு நிலத்திற்கு அதிகளவில் வருவதால் எப்போதும் வரும் பறவைகள் கூட இப்போதெல்லாம் வருவதில்லை எனவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ராம்சர் அங்கீகாரம்: இந்த விவகாரம் தொடர்பாக இயற்கை ஆர்வலர்களான பூவுலகின் நண்பர்கள் சுந்தராஜன் நம்மிடம் கூறியதாவது, “பள்ளிக்கரணையில் இந்த வழித்தடப் பணிகளை மாநகராட்சி தொடங்கிய உடனே சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் வழக்கு தொடர்ந்திருந்தோம். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு ஏற்கனவே ‘ராம்சர்’ அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தக்கவைத்துக் கொள்வதற்கே அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
முறையான பராமரிப்பு, இனப்பெருக்க காலக்கட்டத்தில் பறவைகளுக்கு ஏதுவான சூழல் இப்படி எந்த ஒரு வசதியுமே பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பின்பற்றப்படவில்லை. இப்படி இருக்கும் சூழலில் எதற்கு இந்த வழித்தடம் என வழக்கை நாங்கள் தொடர்ந்தோம்” என கூறினார். மேலும் பேசிய அவர், “சதுப்பு நிலத்தில் வழித்தடம் அமைக்கவில்லை சதுப்பு நில எல்லை பகுதிகளில்தான் அமைக்கின்றோம் என அதிகாரிகள் கூறினார்கள்.
எதுவாயினும் சதுப்பு நிலம் என்பது வேறு, நீர்நிலைகள் என்பது வேறு. நீர்நிலைகளாக இருந்த இடத்தையெல்லாம் ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டிவிட்டு, அவைகளை அகற்றாமல் சதுப்பு நிலத்தில் நீர் வழித்தடம் அமைப்பது என்பது சதுப்பு நிலத்தை விரைவில் அழிவு நிலைக்கு கொண்டு செல்லும் செயல். ராம்சர் பட்டியலில் இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பட்டியலில் இருந்து நீக்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
சதுப்பு நிலமும் வறண்ட நிலமாகும்: இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் போலவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும் பறவைகள் படையெடுக்கும். ஆனால், சில ஆண்டுகளாக இந்த சதுப்பு நிலங்களுக்கு 'பெலிகன்' பறவைகளைத் தவிர வேறு எந்த பறவை இனங்களும் வருவதில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் வரும் காலத்தில் சதுப்பு நிலம் முற்றிலுமாக அழிந்து வறண்ட நிலமாகத்தான் காட்சியளிக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சில்லென்று மாறிய சென்னை... காலை முதல் பெய்த மழை..