சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரைப் பெருக்க சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், கழிவு நீர் அகற்றும் வாரியம் ஆகியவை இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி 3 லட்சத்து 15 ஆயிரத்து 276 கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளனவா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 421 கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் நல்ல நிலையில் உள்ளது என்றும், 21 ஆயிரத்து 582 கட்டிடங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு பகுதிகளில் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், 25 ஆயிரத்து 394 கட்டிடங்களில் புதிய மழை நீர் சேகரிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டதன் பேரில் அப்பணிகள் நடைபெற்றது.
குறிப்பாக இவற்றில் 41 ஆயிரத்து 694 புதிய மழை நீர் சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பயன்பாடற்றுக் கிடந்த 330 சமுதாயக் கிணறுகள் சீரமைப்பு, பராமரிப்பு மேற்கொள்ளபட்டுள்ளது. இக்கிணறுகளுக்கு அருகில் உள்ள தனியார் கட்டிடங்கள், வணிக வளாகங்களில் உள்ள மழை நீர் சேகரிப்பு இணைப்புகள் பொருத்தப்பட்டு மழை நீர் வீணாகாமல் நிலத்தடி நீர் மேம்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் குறைந்த அளவே மழை பெய்தும் தண்ணீர் வீணாகாமல் இருக்க பல்வேறு நீர் மேலாண்மை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் கடந்த காலங்களை விட அதிக அளவு பெருகியுள்ளது. நீர் மேலாண்மை பணிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அலுவலர்கள், குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு குடியரசு தினத்தன்று மாநகராட்சி ஆணையரால் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
அந்நிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிராக வெள்ளையன் தலைமையில் போராட்டம்