'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவன் வாக்குப்படி, நீர் இந்த உலகத்தின் பிரதானமாகும். மூன்றாம் உலகப்போர் வருமென்றால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும். உலகம் இருக்க வேண்டுமென்றால், தண்ணீர் இருக்க வேண்டும்.
இத்தகைய சிறப்புமிக்க தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சியை சென்னை பிர்லா கோளரங்கத்தில் அமெரிக்கத் துணைத் தூதரகமும் தனியார் தொண்டு நிறுவனமும் கூட்டாக சேர்ந்து, 'வாட்டர் மேட்டர்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்துள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் இக்கண்காட்சி நமக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லலாம். இக்கண்காட்சியில் நமக்கு தண்ணீரின் மூலக்கூறுகள் முதல் தண்ணீரின் முக்கியத்துவம் வரையும்; தண்ணீரின் தோற்றம் முதல் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பது வரையும் அனைத்தையும் புகைப்படத்தின் மூலம் நமக்கு விளக்கமாக... விவரமாகத் தெரியப்படுத்துகிறார்கள்.
இங்கு பண்டையக்காலத்தில் தண்ணீரை எப்படி எல்லாம் பயன்படுத்தி வந்தோம் என்பதை விளக்கும் வகையில் புகைப்படங்கள் அமைந்துள்ளன. ஒரு பொருள் உருவாகத் தேவைப்படும் நீரின் அளவு என்ன என்பதை, இக்கண்காட்சியில் நாம் காணமுடிகிறது.
தற்போது நீர் மாசு என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இருப்பினும் இந்த மாசை எவ்வாறு கட்டுப்படுத்துவது, எவ்வாறு தடுத்து சுத்தப்படுத்துவது குறித்தும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
நாகரிகமாக உள்ள நாம் தினந்தோறும், எவ்வளவு நீரை வீணாக்குகிறோம் என்பதை புகைப்படச் சான்றுடன் விளக்குகிறது.
மாணவருக்காக நீரின் தன்மைகளும் அதன் அடிப்படையான விளக்க முறைகளையும் சொல்லித் தருகிறது, இந்தக் கண்காட்சி.
நீர் என்பது மனிதன் மட்டுமல்லாமல், அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. அதனை சேமித்து வைக்கவும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கண்காட்சி அமைந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: செல்ல மருமகனை மடியில் வைத்து தாய்மாமன் கடமையாற்றிய 'கர்ணன்' தனுஷ்